கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது - எஸ்டிபிஐ கட்சி

நெல்லை,எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு, அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் அதிரடி தீர்ப்பை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது. ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் சாசனத்திற்கு விரோதமாக அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வந்தார். இதற்கு உச்சநீதிமன்றம் இப்போது சவுக்கடி கொடுத்திருப்பது, மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு வரலாற்று தீர்ப்பாக அமைந்துள்ளது. தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்து, ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பளித்துள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கைகள் நேர்மையற்றவை மட்டுமல்ல, அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்று நீதிமன்றம் கண்டித்திருப்பது, ஆளுநரின் தன்னிச்சையான போக்கிற்கு எதிரான கடும் எச்சரிக்கையாகும். தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் தர வேண்டிய கடமை ஆளுநருக்கு உள்ளது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய பாஜக அரசின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் கருவியாக மாறி, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். இதை உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இது, பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டது போல, மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றொரு மைல்கல் தீர்ப்பாகும்.அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவின்படி, ஆளுநருக்கு சுயேட்சையாக செயல்படும் அதிகாரம் இல்லை; மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படியே அவர் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தற்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என்ற ஒன்றிய அரசின் வாதத்தை நிராகரித்து, மாநில அரசின் மசோதாக்களுக்கு மூன்று வாரங்களிலோ அல்லது ஒரு மாதத்திலோ ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெளிவான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் இத்தகைய அரசியல் சாசன விரோத நடவடிக்கைகள், தமிழ்நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் சதியின் ஒரு பகுதியாகவே கருதப்பட வேண்டும். ஒன்றிய பாஜக அரசு, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை மதிக்காத இத்தகைய ஆளுநர்களை நியமித்து, மாநில அரசுகளுக்கு எதிராக அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது பதவியை தவறாக பயன்படுத்தியதற்காக உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. இந்த தீர்ப்பு, தமிழ்நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுத்து, மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால், மக்களுக்காக எடுக்கும் முடிவுகளை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
