தங்கம் விலை புதிய உச்சம்... சவரன் ரூ.70 ஆயிரத்தை கடந்தது

  தினத்தந்தி
தங்கம் விலை புதிய உச்சம்... சவரன் ரூ.70 ஆயிரத்தை கடந்தது

தங்கம் விலை கடந்த ஆண்டு (2024) மார்ச் மாதம் ஒரு சவரன் ரூ.50 ஆயிரம் என்ற உச்சத்தை எட்டியது. அப்போதே இவ்வளவு விலையா? என பேசப்பட்ட நிலையில், அதோடு நிற்காமல் மேலும் விலை அதிகரித்தது.ஒவ்வொரு நாளும் புதிய விலை உயர்வு என்ற அடிப்படையில், வரலாறு காணாத புதிய உச்சத்தை கடந்து வந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு மே முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் மட்டுமே விலை உயராமல், ஒரு சவரன் ரூ.55 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் வரையில் நிலையாக இருந்தது.அதனைத்தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் இருந்து மீண்டும் ஏற்றத்தை நோக்கி தங்கம் விலை பயணித்தது. அதன் விளைவாக கடந்த ஜனவரி மாதம் 22-ந்தேதி ஒரு சவரன் ரூ.60 ஆயிரம் என்ற நிலையை அடைந்தது. கடந்த மாதம் 14-ந்தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தையும் தாண்டியது.இதற்கு பிறகாவது குறையுமா? என்ற கேள்வி அனைவரிடமும் இருந்த சூழலில், இனி வரும் நாட்களிலும் தங்கம் விலைக்கு யாரும் கடிவாளம் போட முடியாது. உச்சத்திலேயே தொடர்ந்து பயணிக்கும் என சொல்லப்பட்டது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை அதிரடியாக உயருவதும், சற்று இறங்குவதுமாகவே இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வந்த நேரத்தில் தங்கம் விலை கடந்த 4-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரை குறைந்து வந்தது.பரஸ்பர வரி விதிப்பில் அமெரிக்காவுக்கும் - சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்ததால், பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனைத்தொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால் அதன் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயரத் தொடங்கி இருக்கிறது.அதன்படி, கடந்த 3 நாட்களாக தாறுமாறாக தங்கம் விலை உயர்ந்து இருக்கிறது. கடந்த 9-ந்தேதி தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்தது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1,480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.69,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.110-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

மூலக்கதை