பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் இன்று தீர்த்தவாரி உற்சவம்

திருப்பத்தூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (திங்கட்கிழமை) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணியளவில் நடைதிறக்கப்படும். பின்னர் கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும்.தொடர்ந்து மூலவர் அருகில் வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். காலை 9 மணிக்கு மேல் கோவில் திருக்குளத்தில் அங்குச தேவர் மற்றும் அஸ்திர தேவர் எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.மாலை 6 மணிக்கு மேல் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் தொடர்ந்து மூஷிக வாகனத்தில் கற்பகவிநாயகரும், ரிஷப வாகனத்தில் சந்திரசேகர் கவுரி அம்பாளுடனும் எழுந்தருளி சிறப்பு ஆராதனையுடன் கோவில் உட்பிரகாரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பக்தர்கள் நிழலில் நின்று வரிசையாக சென்று சாமி கும்பிடும் வகையில் மேற்கூரைகள் வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பக்தர்களின் வசதிக்காக கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டிகள் நற்சாந்துபட்டி குமரப்பன் செட்டியார், காரைக்குடி சித.பழனியப்பன் செட்டியார் ஆகியோர் செய்துள்ளனர்.
மூலக்கதை
