தொடர் விடுமுறையைக் கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகமாகவே இருக்கும்.அந்த வகையில், புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வனப்பகுதியில் உள்ள குணா குகை, பில்லர் ராக், பைன்மரக் காடு, மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்துளனர்.இதேபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். மேலும் பிரையண்ட் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள புல்தரைகளில் அமர்ந்து குடும்பத்தினருடன் செல்பி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.நாளை ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையால் கொடைக்கானலில் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மூலக்கதை
