பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் - திருமாவளவன்

  தினத்தந்தி
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும்  திருமாவளவன்

சென்னை,விசிக தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;திராவிடக் கட்சிகளில் ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி அவர்கள் (பாஜக) இங்கே காலூன்றி நிற்க வேண்டும். பின்னால், அடுத்த திராவிடக் கட்சியையும் அழித்தொழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கிறது. திமுக, அதிமுக என்கிற இரண்டு அரசியல் கட்சிகளை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தாண்டி, இங்கு நிலைக்கொண்டிருக்கிற சமூக நீதி அரசியலை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அது தான் பாஜகவின் உண்மையான நோக்கம். உள்நோக்கம். ஆனால், இவற்றை எல்லாம் அறிந்தும் கூட அதிமுக ஒரு வரலாற்றுப் பிழையை செய்துள்ளது. 2021ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த நிலையிலும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைப்பது என்பது அதிமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தும் இப்படி முடிவு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிமுகவிற்கு ஏற்படுகிற பின்னடைவுகளை எல்லாம் தாண்டி, பாஜகவை வாக்கு வங்கி ரீதியாக வலிமைப் படுத்துவதற்கு துணைப் போகிறது என்பது வரலாற்றுப் பிழை. அதிமுக மீண்டும் சிந்தித்த மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது வரலாற்று தேவையாக இருக்கிறது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.மேலும், முதலமைச்சரின் கருத்தை முழுமையாக ஏற்று ஆதரிக்கிறோம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை