தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை - துரை வைகோ

சென்னை, ம.தி.மு.க.வின் நிர்வாக குழு நாளை கூடும் நிலையில் அக்கட்சியின் முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ராஜினாமா செய்துள்ளார். தன்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவு, மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றும் தான் வெளியிட்டுள்ள கடிதத்தில் துரை வைகோ தெரிவித்துள்ளார். துரை வைகோ ராஜினாமா கடிதம் தொடர்பாக, நாளை நடைபெறும் ம.தி.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் வைகோ முக்கிய முடிவு எடுப்பார் என்று அக்கட்சியின் பொருளாளர் செந்திலதிபன் தெரிவித்துள்ளார். நாளை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்றும், ம.தி.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவும் பங்கேற்பார் எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில், கட்சியில் இருந்து விலகிய துரை வைகோ இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், கட்சி பதவியில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து துரை வைகோ கூறியதாவது;"என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். கட்சியில் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். நிர்பந்தத்தாலேயே அரசியலுக்கு வந்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன். பதவியில் இருப்பதால்தான் பிரச்சினை வருகிறது, தொண்டனாக தொடர்வேன். இது உள்கட்சி விவகாரம், வெளியில் விவாதிக்க முடியாது. தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை."இவ்வாறு அவர் கூறினார்.
மூலக்கதை
