சுப்ரீம் கோர்ட்டை பாஜக எம்.பி.க்கள் விமர்சித்தது தொடர்பாக ஜே.பி.நட்டா விளக்கம்

  தினத்தந்தி
சுப்ரீம் கோர்ட்டை பாஜக எம்.பி.க்கள் விமர்சித்தது தொடர்பாக ஜே.பி.நட்டா விளக்கம்

புதுடெல்லி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய சுப்ரீம்கோர்ட்டு, மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில் நீதித்துறை மீது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கா் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். அதேபோல, பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை சாடி இருந்தனர். சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து இருந்தன.இந்த நிலையில் பாஜக எம்.பி.க்களின் கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜே.பி. நட்டா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்து இருப்பதாவது;"நீதித்துறை மற்றும் தலைமை நீதிபதி குறித்து பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே , தினேஷ் சர்மாவின் கருத்துக்களுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அவர்களின் தனிப்பட்ட கருத்துகள். ஆனால் பாஜக அவற்றுடன் உடன்பட வில்லை அல்லது அத்தகைய கருத்துக்களை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. பாஜக அவற்றை முற்றிலுமாக நிராகரிக்கிறது. பாஜக எப்போதும் நீதித்துறையை மதித்து அதன் உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளது. ஏனெனில் சுப்ரீம்கோர்ட்டு உள்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் நமது ஜன நாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அரசியலமைப்பு பாதுகாப்பின் வலுவான தூண் என்று நாங்கள் நம்புகிறோம்.இதுபோன்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் நான் அறிவுறுத்தி உள்ளேன்" இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை