தினம் தினம் உச்சம் தொடும் தங்கம் விலை : உயர்வுக்கு என்ன காரணம்?

  தினத்தந்தி
தினம் தினம் உச்சம் தொடும் தங்கம் விலை : உயர்வுக்கு என்ன காரணம்?

தங்கம் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. ஒரு பவுன் ரூ.74 ஆயிரத்து 320 ரூபாயாக விற்பனை ஆகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருவதால் தங்கம் நகை வாங்குவோரை கலக்கம் அடைய வைத்துள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.* புவிசார் அரசியல், நாடுகளுக்கு இடையேயான மோதல், பதற்றம் ஆகியவை தற்போது அதிகமாக உள்ளது. இதனால், பாதுகாப்பான முதலீடாக பல்வேறு நாடுகளும் தங்கத்தை அதிகம் வாங்குகின்றன. இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. இது விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. * அமெரிக்காவில் பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்ற கவலை, மற்றும் அரசாங்க கடன் பிரச்சினை போன்றவையும் தங்க விலையை பாதிக்கின்றன. நாடுகள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் விலை உயர இதுவும் ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.* அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்தார். சீனா மீது 245 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. வர்த்தக போர் பதற்றம் காரணமாக பிற நாடுகளின் நாணயத்தை ஒப்பிடும் போது அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துள்ளது. தங்கம் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக நிபுணர்கள் சொல்கிறார்கள். * பங்குச் சந்தை, அரசு பத்திரங்கள், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட மற்ற முதலீடுகளில் நிலையற்ற தன்மை காணப்படுவதாலும், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. இத்தகைய காரணங்களால், தங்கம் விலை புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது.

மூலக்கதை