பயங்கரவாத தாக்குதல் எதிரொலி; பாகிஸ்தான் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

இஸ்லாமாபாத்,காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் ஒருபகுதியாக, பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தவும், அட்டாரி-வாகா எல்லை மூடவும் இந்தியா முடிவு செய்துள்ளது. அதோடு, பாகிஸ்தான் நாட்டவர்கள் இந்தியாவிற்குள் நுழைய அனுமதி இல்லை என்றும், தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் எனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் சிந்து நதிநீரை இந்தியா நிறுத்தினால், அது போராகவே கருதப்படும் என்றும், மேலும் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், பாகிஸ்தானின் பங்குச்சந்தை(PSX) கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இன்று காலை பாகிஸ்தானின் முக்கிய பங்கு குறியீடான KSE-100, துவக்கத்திலேயே 2,485 புள்ளிகள் சரிந்து 114,740 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்தது.தொடர்ந்து மதிய வர்த்தகத்தில் லேசான மீட்சிக்கான அறிகுறி தென்பட்டது. இதனால் இழப்பு 1196 புள்ளிகளாக குறைந்தது. நண்பகலில், பங்கு வர்த்தக குறியீடு 116,030.02 புள்ளிகளாக இருந்தது. இருப்பினும், அது மீண்டும் சரிந்து இறுதியாக 2,206.33 புள்ளிகள் அல்லது 1.92% குறைந்து 115,019.81-ல் நிறைவடைந்தது.இந்தியாவுடனான தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் வரை, பாகிஸ்தானின் பங்குச்சந்தையில் நிச்சயமற்ற போக்கு தொடர்ந்து நிலவும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூலக்கதை
