பயங்கரவாத தாக்குதல்: கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்த காஷ்மீர் வியாபாரிகள்

  தினத்தந்தி
பயங்கரவாத தாக்குதல்: கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்த காஷ்மீர் வியாபாரிகள்

ஸ்ரீநகர்,காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்தது. தொடர்ந்து பாகிஸ்தானும் தனது வான் எல்லையை மூடுவது உள்ளிட்ட அடாவடி அறிவிப்புகளை வெளியிட்டது.சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், காஷ்மீர் வியாபாரிகள் தங்கள் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி பயங்கரவாத தாக்குதலுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதன்படி காஷ்மீரின் மத்திய லால் சவுக் பகுதியில் உள்ள கடைகளில் இன்று கருப்புக்கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன. இது குறித்து வியாபாரிகள் சங்க தலைவர் பெரோஸ் அகமது பாபா கூறுகையில், "சுற்றுலா பயணிகள் மீது முதல் முறையாக இத்தகைய மோசமான தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. பயங்கரவாத தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு தங்கள் ஆறுதலை தெரிவிக்கும் விதமாகவும், பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கும் வகையிலும் நாங்கள் கருப்புக்கொடிகளை ஏற்றி வைத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

மூலக்கதை