பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது: மத்திய அரசு

  தினத்தந்தி
பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது: மத்திய அரசு

புதுடெல்லி,ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எப். பொறுப்பேற்றுள்ளது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாறி மாறி எடுக்கப்படும் இந்த நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.இந்த நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தீவிரவாத தாக்குதலையடுத்து ஜம்மு-காஷ்மீரில் 400-க்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அனந்த்நாக், பந்திபுரா மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், எல்லை பாதுகாப்புப்படை, சிஆர்பிஎப், ஐம்மு - காஷ்மீர் மாநில காவல்துறை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் களமிறக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை