7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

  தினத்தந்தி
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

திருவாரூர்,திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில் தாய் மாமன் வீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் தங்கி அங்கு உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் தாய் மாமனுக்கு திருமணமாகி குழந்தை இல்லாததால் தனது தங்கை மகளை சிறுவயதில் இருந்து வீட்டில் வைத்து வளர்த்து படிக்க வைத்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமியின் தாய் மாமனும் அவருடைய மனைவியும் கூலி வேலைக்கு சென்ற நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆமூர் பெரிய காலனி தெரு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விக்னேஷ்(வயது28) வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் இதை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது நடந்த விவரங்களை சிறுமி தனது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். இதனால் சிறுமியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இது குறித்து சிறுமியின் தாய் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். விக்னேசுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை