என் நேர்மையை கேள்விக்குள்ளாக்காதீர்கள்: நீரஜ் சோப்ரா வருத்தம்

புதுடெல்லி, ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.இந்த ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ் ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.இந்த தொடரில் பங்கேற்க 2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்திருந்தார்.இருப்பினும் நீரஜ் சோப்ராவின் அழைப்பை அர்ஷத் நதீம் நிராகரித்தார். வரும் மே 22-ம் தேதி தென் கொரியாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளதால் தன்னால் கலந்துகொள்ள முடியாது என்று அர்ஷத் நதீம் விளக்கமளித்தார்.இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அத்தகைய சூழலில் பாகிஸ்தான் வீரருக்கு நீரஜ் சோப்ரா அழைப்பு விடுத்ததை கேள்விப்பட்ட சிலர் சமூல வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள நீரஜ் சோப்ரா தனது எக்ஸ் பக்கத்தில், "நான் அதிகம் பேசுபவன் கிடையாது. ஆனால் அதற்காக நான் தவறு என்று நினைப்பதை எதிர்த்துப் பேசமாட்டேன் என்று அர்த்தமல்ல. குறிப்பாக நமது நாட்டின் மீதான எனது அன்பையும், எனது குடும்பத்தின் மரியாதையையும் குறித்து விமர்சனங்கள் வந்துள்ளன.நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டியில் பங்கேற்க அர்ஷத் நதீமை அழைக்கும் எனது முடிவு குறித்து நிறைய பேச்சுக்கள் வந்துள்ளன. அதில் பெரும்பாலானவை வெறுப்பு மற்றும் துஷ்பிரயோகம். அவர்கள் என் குடும்பத்தை கூட அதில் இருந்து விலக்கவில்லை. அர்ஷத்துக்கு நான் விடுத்த அழைப்பு ஒரு தடகள வீரரிடமிருந்து இன்னொருவருக்கு வந்தது, அதற்கு மேல் எதுவும் இல்லை. நீரஜ் சோப்ரா கிளாசிக்கின் நோக்கம் இந்தியாவிற்கு சிறந்த தடகள வீரர்களைக் கொண்டுவருவதும், நமது நாடு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வுகளின் தாயகமாக இருக்க வேண்டும் என்பதும் ஆகும். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு 2 நாட்களுக்கு முன்பு, அனைத்து தடகள வீரர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன. கடந்த 48 மணி நேரத்தில் நடந்த அனைத்திற்கும் பிறகு, நீரஜ் சோப்ரா கிளாசிக்கில் அர்ஷத்தின் இருப்பு முற்றிலும் கேள்விக்குறியாக இருந்தது. எனது நாடும் அதன் நலன்களும் எப்போதும் எனக்கு முக்கியம். தங்கள் உறவுகளை இழந்து தவிப்பவர்களுடன் எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. ஒட்டுமொத்த தேசத்தோடு சேர்ந்து, நடந்ததை நினைத்து நான் வேதனையும் கோபமும் அடைந்துள்ளேன். நமது நாட்டின் பதில் ஒரு தேசமாக நமது வலிமையைக் காண்பிக்கும் என்றும், நீதி நிலைநாட்டப்படும் என்றும் நான் நம்புகிறேன்.நான் பல ஆண்டுகளாக என் நாட்டை பெருமையுடன் சுமந்து வருகிறேன், அதனால் எனது நேர்மை கேள்விக்குள்ளாக்கப்படுவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. எந்த நல்ல காரணமும் இல்லாமல், என்னையும் என் குடும்பத்தையும் குறிவைப்பவர்களுக்கு நான் என்னை விளக்க வேண்டியிருப்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நாங்கள் எளிமையானவர்கள், தயவுசெய்து எங்களை வேறு யாராகவும் காட்டாதீர்கள். ஊடகங்களின் சில பிரிவுகள் என்னைச் சுற்றி உருவாக்கிய பல தவறான கதைகள் உள்ளன, ஆனால் நான் பேசாததால், அது உண்மையாகாது. மக்கள் எப்படி கருத்துகளை மாற்றுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்வது எனக்கு கடினமாக உள்ளது" என்று கூறினார்.
மூலக்கதை
