ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பெங்களூருவின் மிகச்சிறந்த தேர்வு இவர்தான் - பயிற்சியாளர் கருத்து

  தினத்தந்தி
ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பெங்களூருவின் மிகச்சிறந்த தேர்வு இவர்தான்  பயிற்சியாளர் கருத்து

பெங்களூரு,ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 70 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் துருவ் ஜுரெல் 47 ரன் எடுத்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், குருனால் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். கடந்த சீசன்களில் சொதப்பி வந்த பெங்களூரு அணி, இந்த சீசனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.இதற்கு முக்கிய காரணம் அவர்கள் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் செயல்பட்ட விதம்தான். கடந்த காலங்களில் மெகா ஏலத்தில் சிறப்பாக செயல்படாத பெங்களூரு, இந்த மெகா ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டு, அணிக்கு தேவையான வீரர்களை எடுத்தது. இதன் காரணமாக சரியான கலவையில் அமைந்துள்ள பெங்களூரு அணி வெற்றிகளை குவித்து வருகிறது.இந்நிலையில், ஐ.பி.எல். மெகா ஏலத்தில் பெங்களூருவின் மிகச்சிறந்த தேர்வு குருனால் பாண்ட்யா தான் என அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, மெகா ஏலத்தில் மிகச்சிறந்த தேர்வு குருனால் பாண்ட்யாதான். அவரது ஆல்ரவுண்ட் திறமையையும், அவரது அனுபவமும் எங்களை மிகவும் கவர்ந்துள்ளது.அவர் ஒரு வீரராக ஐ.பி.எல் தொடரை வென்றுள்ளார், ஐ.பி.எல். அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும், இந்திய அணிக்காகவும் விளையாடி உள்ளார். வெற்றிக்கான பசியுடன் இருக்கிறார். குருனால் பாண்டியாவிடம் பிடித்தது அதுதான். அவர் எங்களின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளருடன் இணைந்து சில நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர். அவர்களுக்குள் சிறந்த ஆலோசனைகள் மற்றும் திட்டங்கள் இருக்கிறது. அதனை குருனால் பாண்ட்யா களத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அவர் ஆர்.சி.பி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து வருவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை