காஷ்மீரில் அமைதியான சூழலை கெடுக்க முயற்சி - ரஜினி

சென்னை,ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அனிருத் இசையமைத்த இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'ஜெயிலர் 2' என பெயரிடப்பட்டு உருவாகிவரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்று நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து தற்போது கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைத்தொடரில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது. ரஜினி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிர்ணா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தமிழக - கேரள எல்லையான கோவை ஆனைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பிற்காக ஆனைக்கட்டியில் இருந்து மாங்கரைக்கு காரில் சென்றார் ரஜினி. பின்னர் சென்னை திரும்பினார்.இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது நடிகர் ரஜினிகாந்திடம் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். "காஷ்மீரில் அமைதியான சூழலை கெடுக்க எதிரிகள் முயற்சித்து வருகின்றனர்.குற்றவாளிகளை கண்டுபிடித்து, கனவில் கூட நினைக்காத வகையில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
மூலக்கதை
