கனமழை, நிலச்சரிவு: சிக்கிமில் 1,000 சுற்றுலா பயணிகள் சிக்கி தவிப்பு

காங்டாக், கிழக்கு இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது சிக்கிம் மாநிலம். பசுமையான நிலப்பரப்புகள், அழகிய ஏரிகள், அருவிகள் மற்றும் இயற்கை அழகு நிறைந்த சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பக்கூடிய மாநிலம். இங்கு கடந்த 2 நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.வடக்கு சிக்கிமில் லாச்சுங், லாச்சென் ஆகிய மலைவாசஸ்தலங்கள் உள்ளன. அவற்றின் இயற்கை அழகை ரசிக்கவும், குருடோங்மர் ஏரி மற்றும் யும்தாங் பள்ளத்தாக்கு போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களை பார்வையிடவும் கோடை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இந்த சுற்றுலா தலங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டு உள்ளன. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளில் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கித்தவித்து வருகின்றனர். சுங்தாங்கில் சுமார் 200 சுற்றுலா வாகனங்கள் சிக்கி உள்ளன. அந்த வாகனங்களில் பயணித்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஒரு குருத்வாராவில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் அவர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கையாக மறு அறிவிப்பு வரும் வரை வடக்கு சிக்கிமுக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப வேண்டாம் என்று அனைத்து சுற்றுலா நிறுவனங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த பகுதியை பார்வையிட வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளையும் அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்தனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
மூலக்கதை
