பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட 10 பேர் கைது - அசாம் முதல்-மந்திரி தகவல்

திஸ்பூர்,காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது.இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை ஆதரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் மாநில முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-"பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை ஆதரிப்பவர்கள் அல்லது நியாயப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்ற நபர்கள் குறித்து உடனடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தேச விரோத பதிவுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில், சமூக வலைதள பதிவுகளை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்."இவ்வாறு ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
