தேசிய பாதுகாப்பு விவகாரம்; ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் - மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி,பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதை தவிர்க்குமாறு இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை செய்தியாக வெளியிடுவதில் மிகுந்த எச்சரிக்கையும், பொறுப்புணர்வும் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. செய்தி நிறுவனங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்களுக்கும் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய பாதுகாப்பின் நலனுக்காக, அனைத்து ஊடக தளங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடும்போது மிகுந்த பொறுப்புடன் செயல்படவும், தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.முக்கியமான பாதுகாப்பு செயல்பாட்டு விவரங்களை முன்கூட்டியே வெளியிடுவது தேச விரோத சக்திகளுக்கு உதவக்கூடும். இது பாதுகாப்பு பணிகளின் செயல்திறன் மற்றும் சம்பந்தப்பட்ட பணியாளர்களின் பாதுகாப்பு இரண்டையும் பாதிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
