சென்னை: அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியில் இருந்து தவறி விழுந்த 4½ வயது சிறுவன் பலி

சென்னை தியாகராயநகர், அபிபுல்லா சாலை, 3-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் திலீப் (வயது 38). இவரது மனைவி சுவாதி. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நான்கரை வயதில் துருவன் என்ற மகனும் இருந்தான். வேலூரில் வசித்து வரும் சுவாதியின் பெற்றோர், கோடை விடுமுறைக்காக கோயம்பேடு 100 அடி சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தங்களது வீட்டுக்கு வந்திருந்தனர். தனது பெற்றோரை பார்ப்பதற்காக சுவாதி, தனது மகன் மற்றும் மகளை அழைத்துக் கொண்டு கோயம்பேடு வந்தார்.அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியில் உள்ள பெற்றோர் வீட்டில் சுவாதி உள்பட அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த துருவன், ஜன்னல் வழியாக 6-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டான். இதில் படுகாயம் அடைந்த அவன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினான்.சிறுவனை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் துருவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூலக்கதை
