தமிழகத்தில் லைட்டர் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

  தினத்தந்தி
தமிழகத்தில் லைட்டர் விற்பனையை தடை செய்ய நடவடிக்கை  அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

தமிழக சட்டப்பேரவையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, "தென்மாவட்டங்களில் விவசாயத்துக்கு அடுத்த நிலையில், தீப்பெட்டி தொழில் ஏழை பெண் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் தொழிலாக உள்ளது. அந்த தொழிலுக்கு லைட்டர் விற்பனை பெரும் சவாலாக உள்ளது. தீப்பெட்டி தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளித்ததின் பேரில், முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.ஆனால் உதிரி பாகங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. முற்றிலுமாக தடை செய்யப்படவில்லை. அந்தமான் அரசு, சுற்றுச்சூழல் துறையின் கீழ் லைட்டர் விற்பனைக்கு தடை விதித்துள்ளது. அதுபோல் சுற்றுச்சூழல் துறை சார்பில் தமிழகத்தில் லைட்டரை தடை செய்ய வேண்டும்," என்று கூறினார்.இதற்கு பதில் அளித்து பேசிய நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "லைட்டர் விற்பனையால் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு பிரச்சினை இருக்கிறது என்பதை அரசு அறியும். தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த லைட்டர்களும், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடியவைதான்.இதன்கீழ் லைட்டர் விற்பனையை தடை செய்வது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை, அரசு பரிசீலனையில் உள்ளது. இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.

மூலக்கதை