இது சரியான நேரம் - சென்னை அணிக்கு இந்திய முன்னாள் கேப்டன் அட்வைஸ்

  தினத்தந்தி
இது சரியான நேரம்  சென்னை அணிக்கு இந்திய முன்னாள் கேப்டன் அட்வைஸ்

மும்பை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கத்திற்கு மாறாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 9 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்றுள்ளது. இதனால் வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. இதனால் அந்த அணியை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் எதிர்கால வீரர்களை உருவாக்க இது சரியான நேரம் என்று இந்திய முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ரச்சின் ரவீந்திர ஒரு அற்புதமான இளம் திறமைசாலி. ஆனால் இந்த வடிவத்தில், அவர் கொஞ்சம் அவசரப்படுவது போல் தெரிகிறது. ஒருவேளை 3-வது பேட்டிங் வரிசை அவருக்கு பொருத்தமாக இருக்கலாம். ஷிவம் துபேவை தவிர மிடில் ஆர்டரில் பலமான பேட்ஸ்மேன்கள் இல்லை. பிரெவிஸ் மற்றும் மாத்ரே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவது நேர்மறையான விஷயம். "ஆனால் அவர்கள் பதிரனாவைத் தாண்டி சிந்திக்கத் தொடங்க வேண்டும். நாதன் எல்லிஸ் ஒரு அனுபவம் வாய்ந்த டெத் பவுலர். ஆனால் முதல் போட்டிக்கு பிறகு அவர் இடம்பெறவில்லை. ஐந்து ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில், இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கொடுத்து எதிர்காலத்திற்கான கட்டமைப்பைத் தொடங்க இது சரியான நேரம்" என்று கூறினார்.

மூலக்கதை