சென்னை அணியில் அவரை தவிர மற்ற 10 வீரர்கள் என்ன செய்கிறார்கள்..? சுரேஷ் ரெய்னா ஆதங்கம்

மும்பை,10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கத்திற்கு மாறாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.இதுவரை 9 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்றுள்ளது. இதனால் வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. இதனால் அந்த அணியை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்சில் தோனியை தவிர மற்ற 10 வீரர்கள் என்ன செய்கிறார்கள்? என்று இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆதங்கம் தெரிவித்துள்ளார். மேலும் ஏலத்தில் தோனி ஈடுபடுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "பலரும் ஏலத்தில் சிஎஸ்கே அணியை முழுமையாக தோனி வாங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வீரர்களை வாங்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி தோனிக்கு அழைப்பு வரலாம். ஆனால் அவர் அதில் ஈடுபடுவதில்லை. தோனி இப்படிப்பட்ட அணியை வாங்கியிருப்பாரா? என்று நீங்களே கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். அன்கேப்ட் வீரராக, 43 வயதில் கேப்டனாக கடினமாக உழைக்கும் தோனி இப்போதும் தனது சிறந்த முயற்சிகளைக் கொடுக்கிறார். 43 வயதில் கேப்டன்ஷிப் விக்கெட் கீப்பிங் செய்யும் அவர் மொத்த அணியையும் தோளில் சுமக்கிறார். ஆனால் மற்ற 10 வீரர்கள் என்ன செய்கிறார்கள்? ரூ. 18, 17, 12 கோடிகள் சம்பளம் வாங்கும் வீரர்கள் கேப்டனுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால் இதற்கு முன்பு தோல்வியை சந்திக்காத அணிகளிடம் நாம் தோற்றுள்ளோம். இது தீர்க்கப்பட வேண்டும். இந்த வீரரை நம்பலாமா? இவர் மேட்ச் வின்னரா? என்று பார்க்க வேண்டும். சில வீரர்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்கள். அவர்கள் இருந்தும் முடிவு என்ன? அதே தவறுகளை செய்து நீங்கள் மீண்டும் தோற்கிறீர்கள்" என்று கூறினார்.
மூலக்கதை
