ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை: சென்னை பயிற்சியாளர் பிளமிங் ஒப்புதல்

  தினத்தந்தி
ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை: சென்னை பயிற்சியாளர் பிளமிங் ஒப்புதல்

சென்னை, 10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கத்திற்கு மாறாக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 9 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 தோல்வி மற்றும் 2 வெற்றி பெற்றுள்ளது. இதனால் வெறும் 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது. நேற்று முன்தினம் நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்த பிறகு சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில், 'ஐ.பி.எல். ஏலத்தில் மற்ற அணிகள் சிறந்த வீரர்களை எடுத்து இருக்கிறார்கள். நாங்கள் சரியான வீரர்களை எடுத்து இருக்கிறோமா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏலம் என்பது முழுமையான அறிவியல் இல்லை. மிருகம் போன்ற பாய்ச்சல் கொண்டது. 25 மணி நேரத்துக்குள் வீரர்களை வாங்குகிறோம், ஏலத்தின் முடிவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைகிறோம். இருப்பினும் எங்களுக்கு ஒரு நல்ல அணி கிடைத்து இருப்பதாகவே நான் இன்னும் நினைக்கிறேன். நாங்கள் சிறந்த அணியாக மாறுவதற்கான தூரம் வெகுதொலைவில் இல்லை. முக்கிய வீரர்களின் காயத்தாலும், ஒரு சில வீரர்கள் பார்மை இழந்ததாலும் போட்டிக்கான திட்டத்தை உருவாக்க கடுமையாக போராடினோம். அதிகமான மாற்றங்களை செய்தோம். ஒருவேளை நாங்கள் இல்லாத ஒன்றை தேட முயற்சித்து இருக்கலாம். எதுவும் எங்களுக்கு சரியாக அமையவில்லை. நிச்சயமாக நாங்கள் எடுத்த முடிவுகள், அதனால் நடந்தவைகளுக்கு எங்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. அது 100 சதவீதம் என்னில் இருந்து தொடங்குகிறது.. எஞ்சிய ஆட்டங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம்' என்றார்.

மூலக்கதை