தொண்டு நிறுவனம் தொடங்கிய 11-ம் வகுப்பு மாணவி

  தினத்தந்தி
தொண்டு நிறுவனம் தொடங்கிய 11ம் வகுப்பு மாணவி

புதுடெல்லி, -பார்வை குறைபாடுள்ள சிறுமியால் ஏற்பட்ட தாக்கத்தால், கண்பராமரிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த 11-ம் வகுப்பு மாணவி தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளார். இருட்டில் உள்ளவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதே லட்சியம் என்று அவர் கூறுகிறார்.உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத்தை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி, டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டாள். அந்த சிறுமிக்கு பார்வை குறைபாடு இருந்தது. இதனால் கரும்பலகையில் எழுதப்பட்டு இருந்த வாசகங்களை படிக்க மிகவும் சிரமப்பட்டாள்.இதுபற்றி அறிந்த நொய்டாவை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியான சஞ்சனாவுக்கு, மனதுக்குள் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் தனது நண்பர்களுடன் இதுபற்றி ஆலோசித்தார். பார்வை குறைபாடு எவ்வளவு கொடூரமானது. அதுபற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தனது நண்பர்களுடன் இணைந்து தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.இதுபற்றி மாணவி சஞ்சனா கூறியதாவது:-பார்வை குறைபாடு பிரச்சினையால் லட்சக்கணக்கான மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பாதையை ஒளிரச் செய்ய நான் விரும்புகிறேன். சமூகத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களின் சிகிச்சைக்கு உதவி செய்யவும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.எங்கள் விழிப்புணர்வு பிரசாரத்தை பிரோசாபாத்தில் இருந்தே தொடங்குகிறோம். ஏனென்றால் பிரோசாபாத்தில் பலர் கண்ணாடி வளையல் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அதிக வெப்பம் காரணமாக பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அங்கு கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி கண்ணாடி தொழிற்சாலை தொழிலாளர்களில் 35 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பார்வை குறைபாடு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதை உரிய சிகிச்சை மூலம் சரிசெய்யலாம்.அவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் அப்படியே விட்டுவிடுகிறார்கள். எனவே அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, இருளில் இருக்கும் அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவது எங்கள் லட்சியம்.இவ்வாறு அந்த மாணவி கூறினார்.

மூலக்கதை