பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட குதிரை ஓட்டி குடும்பத்துக்கு நிவாரணம்: மராட்டிய துணை முதல்-மந்திரி அறிவிப்பு

மும்பை, காஷ்மீர் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களில் உள்ளூர் குதிரை ஓட்டி தொழில் செய்து வந்த செய்யது அதில் ஹூசேன் ஷாவும்(வயது20) ஒருவர். இவர் தாக்குதலில் இருந்து சுற்றுலா பயணிகளை காப்பாற்ற பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க முயன்றார். அப்போது அவரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்தனர். செய்யது அதில் ஹூசேன் ஷா வருமானத்தை மட்டுமே அவரது குடும்பம் நம்பி இருந்து உள்ளது. இந்தநிலையில் அவரது மரணம் குடும்பத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்து இருக்கிறது.இதற்கிடையே சுற்றுலா பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் வீர மரணம் அடைந்த உள்ளூர் குதிரை ஓட்டி செய்யது அதில் ஹூசேன் ஷா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என சிவசேனா தலைவரும், மராட்டிய துணை முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார். ஏக்நாத் ஷிண்டே அவரது சொந்த பணத்தில் இருந்து நிவாரணத்தை வழங்க உள்ளார். மேலும் அவர் செய்யது அதில் ஹூசேன் ஷாவின் குடும்பத்தினரை வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், உங்கள் மகனின் தியாகம் வீண் போகாது என குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.
மூலக்கதை
