தீர்ப்பை அமல்படுத்த கோரும் மனுக்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

  தினத்தந்தி
தீர்ப்பை அமல்படுத்த கோரும் மனுக்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, சொத்து, பணம் தொடர்பான சிவில் வழக்குகளில் கோர்ட்டு பிறப்பிக்கும் தீர்ப்புகளை அமல்படுத்த கோரும் (இ.பி.,) மனுக்கள் விசாரணை கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்படும். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில், சொத்துக்கள், வாகனங்கள் ஜப்தி செய்யப்படும். வழக்குகளில் தொடர்புடைய சொத்துக்களை மீட்டு சாதகமான தீர்ப்பு பெற்றவர்களுக்கு வழங்கப்படும். இந்த இ.பி. மனு கீழ் கோர்ட்டுகளில் நீண்ட காலமாக நிலுவையில் கிடப்பதாகவும், இதனால் கோர்ட்டில் சாதகமான தீர்ப்புகளை பெற்றவர்கள், அதன் பயனை அடைய முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது.இந்தநிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நிலுவையில் உள்ள அனைத்து இ.பி. மனுக்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று அனைத்து கீழ் நீதிமன்றங்களுக்கு சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.இதன்படி, சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் எஸ்.அல்லி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழ் நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ''பல்வேறு கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள அனைத்து இ.பி. மனுக்களையும் 6 மாதங்களுக்குள் விசாரித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தவறினால், ஐகோர்ட்டின் நிர்வாக தரப்புக்கு, சம்பந்தப்பட்ட நீதிபதி பதில் அளிக்க வேண்டும். இந்த உத்தரவை அனைத்து நீதிபதிகளும் கவனத்துடன் தீவிரமாக பின்பற்றவேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை