போலி வரைபடத்துக்கு அனுமதி அதிகாரிகளின் சம்பள உயர்வு 'கட்'
கோவை : கோவை மாநகராட்சியில் போலி வரைபடத்துக்கு, முறைகேடாக அனுமதி வழங்கியது நிரூபணமானதையடுத்து, இரு பெண் அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட, கிருஷ்ணா காலனியில் 'ரிசர்வ் சைட்' மற்றும் 30 அடி ரோட்டை ஆக்கிரமித்து(மனை எண்:62ஏ) போலி வரைபடம் தயாரித்து, கட்டட வரைபட அனுமதி பெறப்பட்டது தொடர்பான புகார், கடந்தாண்டு மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு சென்றது.
அப்போதைய கமிஷனர் பிரதாப், வரைபட அனுமதி வழங்கிய காலகட்டத்தில் நகரமைப்பு அலுவலராக இருந்த சசிபிரியா(தற்போது ஓய்வு), உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, உதவி நிர்வாக பொறியாளராக இருந்த புவனேஸ்வரி ஆகியோருக்கு, மாநகராட்சி பணியாளர் (ஒழுங்கு நடவடிக்கை மற்றும் மேல்முறையீடு) விதிகள் 8(2)ன் கீழ், குற்றச்சாட்டு சுமத்தி நோட்டீஸ் அளித்து, விளக்கம் கேட்டிருந்தார்.
அதில், விதிகளுக்கு புறம்பாக கட்டட அனுமதிக்கு பரிந்துரை செய்ததாகவும், உரிய ஆவணங்களை சரிபார்க்காமல், கட்டட அனுமதி நீட்டிப்பு வழங்க பரிந்துரை செய்து, மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட காரணமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நோட்டீஸ் கிடைத்த, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தியிருந்தார்.
குற்றச்சாட்டு நிரூபணம்!
இதுகுறித்து, மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி விசாரணை நடத்திவந்தார். இந்நிலையில், குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து, இரு பெண் அதிகாரிகளுக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தற்போது, மேற்கு மண்டல உதவி பொறியாளராக விமலா பணிபுரிந்து வருகிறார். மத்திய மண்டல உதவி நிர்வாக பொறியாளாக இருந்த புவனேஸ்வரி, மேட்டூர் நகராட்சிக்கு மாற்றப்பட்ட நிலையில், அவருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
மாநகராட்சி துணை கமிஷனர் செல்வசுரபி கூறுகையில்,''இருவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பித்ததன் அடிப்படையில், இரு ஆண்டுகளுக்கு சம்பள உயர்வை நிறுத்தி வைத்து, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். சசிபிரியாவை பொருத்தவரை, அவர் ஓய்வுபெற்று விட்டதால் நடவடிக்கை இல்லை; அவர் ஓய்வுபெறும் போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது,'' என்றார்.
விதிமுறைகளில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி, தவறு செய்யும் அதிகாரிகள் தப்பித்துக்கொள்கின்றனர். இதை தடுக்க, பணியாளர் விதிகளில் மாற்றம் செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையேல், முறைகேடுகள் தொடரும்.
கோவை : கோவை மாநகராட்சியில் போலி வரைபடத்துக்கு, முறைகேடாக அனுமதி வழங்கியது நிரூபணமானதையடுத்து, இரு பெண் அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி