ஹிந்து மதம் ஒழுக்கத்தை கற்று தந்துள்ளது: விவேக் ராமசாமி

  தினமலர்
ஹிந்து மதம் ஒழுக்கத்தை கற்று தந்துள்ளது: விவேக் ராமசாமி


வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடும், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, ஹிந்து மதம் குறித்தும், கடவுள் வழிபாடு குறித்தும் மிகவும் வெளிப்படையாக தன் கருத்தை கூறியுள்ளார்.

''நான் ஒரு ஹிந்து. அந்த மதம் எனக்கு ஒழுக்கத்தை கற்றுத் தந்துள்ளது. சேவை செய்வதை ஒரு கடமை என உணர்த்தியுள்ளது,'' என, அவர் குறிப்பிட்டுஉள்ளார்.

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் அடுத்தாண்டு நவம்பரில் நடக்க உள்ளது. இதற்காக குடியரசு கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில், இந்தியாவை பூர்விகமாக உடைய விவேக் ராமசாமி, ௩௯, களமிறங்கிஉள்ளார்.

அனைவரும் சமம்



இவருடைய பெற்றோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். வேலைக்காக அமெரிக்கா சென்றனர். அங்கு பிறந்தவர் விவேக் ராமசாமி. பிரபல தொழிலதிபரான இவர், 'குடும்பத் தலைவர்' என்ற பெயரில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பங்கேற்றார்.

அப்போது, ஹிந்து மதம் குறித்தும், கடவுள் வழிபாடு குறித்தும் விரிவாக பேசினார். அவர் பேசியதாவது:

நான் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவன். என்னுடைய இந்த மதம், எனக்கு சுதந்திரத்தை அளித்துள்ளது. அந்த மத நம்பிக்கையே, அதிபர் வேட்பாளர் தேர்தலுக்கான போட்டி வரை என்னை அழைத்து வந்துள்ளது. நான் ஒரு ஹிந்து.

கடவுள் உள்ளார் என்பதை நான் நம்புகிறேன். நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக படைக்கப்பட்டுள்ளோம் என்பதை நம்புகிறேன்.

என்னுடைய இந்த மத நம்பிக்கை, நமக்கென விதிக்கப்பட்டுள்ள கடமையை நிறைவேற்றுவதை எனக்கு கற்றுத் தந்துள்ளது. ஒரு காரியத்தை செய்து முடிப்பதற்காக கடவுளால் படைக்கப்பட்ட கருவிகள் நாம்.

ஒவ்வொருவரும் பல விதங்களில் வேறுபட்டிருந்தாலும், கடவுளின் முன் நாம் அனைவரும் சமம். கடவுள் நம்மிடம் உள்ளார். அதுதான் என் மத நம்பிக்கையின் அடிப்படையாகும்.

குடும்பம், திருமணம், பெற்றோரை மதிப்பது என, பல முக்கிய ஒழுக்கங்களை, என்னுடைய வளர்ப்பு என்னுள் விதைத்துள்ளது. நான் பாரம்பரிய குடும்ப கட்டமைப்பை மதிக்கும் குடும்பத்தில் பிறந்துள்ளேன். குடும்பத்தின் கோட்பாடுகளை என் பெற்றோர் கற்றுத் தந்துள்ளனர்.

அடிநாதம்



பெற்றோர்களை மதிக்க வேண்டும். திருமணம் புனிதமானது. கள்ளக் காதல் தவறு. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடப்பது.

கடவுளின் முன், கடவுளின் பெயரால், குடும்பத்தின் பெயரால் திருமணம் செய்கிறோம். விவாகரத்து என்பது நம்முடைய விருப்ப தேர்வாக இருக்கக் கூடாது.

என் மத நம்பிக்கை, என் குடும்ப வாழ்க்கை முறை இவற்றை எனக்கு கற்றுத் தந்துள்ளது.

நான் கிறிஸ்துவ பள்ளியில் படித்தேன். பைபிள் உள்ளிட்டவற்றை கற்றுத் தந்தனர். அங்கும், பெற்றோரை மதிக்க வேண்டும், குடும்பத்தை மதிக்க வேண்டும் என்பதையே கற்றுத் தந்தனர்.

இந்த ஒழுக்க நெறிகள் என்பது, ஹிந்துவுக்கோ, கிறிஸ்துவர்களுக்கோ சொந்தமானது அல்ல. அது கடவுளுக்கு சொந்தமானது. அந்த ஒழுக்க நெறிகளை, நம் நாட்டின் அடிநாதமாக இருக்க வேண்டும்.

உண்மையில் கடவுள் என்பவர் ஒருவர் இருக்கிறார் என்பதை அனைவரும் நம்ப வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் பதவிக்கு போட்டியிடும், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி, ஹிந்து மதம் குறித்தும், கடவுள் வழிபாடு குறித்தும்

மூலக்கதை