கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுவிப்பு!
உளவு குற்றச்சாட்டில், கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நம் நாட்டைச் சேர்ந்த எட்டு முன்னாள் கடற்படை வீரர்கள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளால், இது சாத்தியமாகி உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள, 'அல் தாஹ்ரா' என்ற தனியார் நிறுவனத்தில், நம் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் எட்டு பேர் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து எட்டு பேரும், 2022 ஆகஸ்டில் கத்தாரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் எட்டு பேருக்கும் கடந்த ஆண்டு அக்., 26ல் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னேற்றம்
இந்த உத்தரவை எதிர்த்து எட்டு பேரும் மேல்முறையீடு செய்தனர். அவர்களுக்கு சட்டம் மற்றும் துாதரக அளவிலான உதவிகளை நம் வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்து வந்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த பருவநிலை மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி துபாய் சென்றார். கத்தார் ஆட்சியாளர் ஷேக் தமிம் பின் ஹமாத் அந்த மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது, கத்தார் ஆட்சியாளரை சந்தித்து பிரதமர் மோடி நீண்ட நேரம் உரையாடினார். கத்தார் வாழ் இந்தியர்கள் நலன் குறித்து அவருடன் உரையாடியதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்த சந்திப்புக்கு பின், சிறையில் அடைக்கப்பட்ட எட்டு இந்திய முன்னாள் வீரர்களை, கத்தாருக்கான இந்திய துாதர் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட துவங்கின.
நம் நாட்டைச் சேர்ந்த முன்னாள் கடற்படை வீரர்களின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கத்தார் நீதிமன்றம், அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சிறை தண்டனையாக மாற்றி கடந்த ஆண்டு டிச., 28ல் உத்தரவிட்டது.
மூன்று முதல் 25 ஆண்டுகள் வரையிலான இந்த சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் விடுவித்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் எடுத்துக் கொண்ட தனிப்பட்ட அக்கறை காரணமாக, நம் முன்னாள் வீரர்கள் விடுவிப்பு சாத்தியமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இந்த விவகாரம் தொடர்பாக பல முறை கத்தார் நாட்டுக்கு சென்று அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து, நம் வெளியுறவுத்துறை செயலர் வினய் குவாத்ரா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நம் முன்னாள் கடற்படை வீரர்கள் நாடு திரும்பியதற்காக கத்தார் அரசுக்கும், ஆட்சியாளர் ஷேக் தமிம் பின் ஹமாத்துக்கும் நன்றி.
ஏழு முன்னாள் வீரர்கள் நாடு திரும்பி விட்டனர். ஒருவரது ஆவணங்கள் சரிபார்ப்பு வேலை முடியாததால், அவர் மட்டும் விரைவில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கின் ஒவ்வொரு கட்டத்தையும் பிரதமர் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கண்காணித்து வந்தார். இந்தியர்கள் தாயகம் திரும்புவதை உறுதி செய்யும் முயற்சிகளிலிருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை.
சந்திப்பு
பிரதமர் தன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை கத்தார் செல்கிறார். அப்போது, கத்தார் ஆட்சியாளர் ஷேக் தமிம் பின் ஹமாத் மற்றும் பிற உயர் அதிகாரிகளை அவர் சந்தித்து பேச உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கத்தாரில் இருந்து நேற்று அதிகாலை வந்த விமானத்தில், நம் முன்னாள் கடற்படை வீரர்கள் கேப்டன் நவ்தேஜ் கில், சவுரப் வசிஷ்ட், கமாண்டர்கள் அமித் நாக்பால், எஸ்.கே.குப்தா, பி.கே.வர்மா, சுகுனாகர் பாகலா, மாலுமி ராகேஷ் ஆகியோர் நாடு திரும்பினர்.
கமாண்டர் புர்னேந்து திவாரி இன்னும் சில தினங்களில் நாடு திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.
நம் முன்னாள் கடற்படை வீரர்கள் நாடு திரும்பியதில் மகிழ்ச்சி. உலகம் எங்கிலும் உள்ள இந்தியர்களை பாதுகாக்க, எந்த நிலையிலும் பிரதமர் மோடி அரசு கடும் முயற்சிகளை எடுக்கும் என்ற நம்பிக்கையை இது மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அனுராக் தாக்குர்மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சர், பா.ஜ.,
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு முன்னாள் கடற்படை வீரர்கள் விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியான செய்தியை, நாட்டு மக்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியும் கொண்டாடுகிறது. அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.
ஜெய்ராம் ரமேஷ்பொதுச்செயலர், காங்.,
பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷாஜியா இல்மி கூறியுள்ளதாவது:நம் முன்னாள் வீரர்களை விடுவிப்பது ஒரு கட்டத்தில் சாத்தியமில்லை என தோன்றியது. ஆனால், இன்றைக்கு அவர்கள் பத்திரமாக நாடு திரும்பி உள்ளனர். பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளனர்.இது, நம் துாதரக முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.
- புதுடில்லி நிருபர் -
உளவு குற்றச்சாட்டில், கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நம் நாட்டைச் சேர்ந்த எட்டு முன்னாள் கடற்படை வீரர்கள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பினர். இந்த