காங்கிரசுக்கு, ரூ.1,600 கோடி எப்படி கிடைத்தது? தேர்தல் பத்திர விவகாரத்தில் அமித் ஷா சவால்!
புதுடில்லி, ''தேர்தல் பத்திரங்களால் பா.ஜ., மட்டுமே பலன் பெற்றதாக கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு, 1,600 கோடி ரூபாயும், இண்டியா கூட்டணிக்கு எங்களைவிட அதிகமாகவும் கிடைத்துள்ளது. கட்டாய வசூல் என்று கூறியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், அவர் யாரை மிரட்டி வசூலித்தார் என்பதை தெரிவிப்பாரா,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளாசி தள்ளினார்.
புதுடில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
கடந்த, 2014ல் பா.ஜ.,வுக்கு கிடைத்த நன்கொடைகளில், 81 சதவீதம், அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ரொக்கமாகவே வந்தது. இது, 2018ல் 18 சதவீதமாக குறைந்தது. கடந்த, 2023ல் 3 சதவீதமானது.
வெளிப்படைதன்மை
கட்சிகளுக்கு கிடைக்கும் நன்கொடைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகவே, தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு, ஒருவர், 1,500 ரூபாய் நன்கொடையாக அளித்தால், அதில், 100 ரூபாய் கட்சிக்கும், மீதமுள்ளவை, கட்சியை நடத்தும் குடும்பங்களுக்கும் சென்று வந்தன.
கட்சியின் வளர்ச்சியைவிட, குடும்பங்களின் நன்மைகளையே அவர்கள் பார்த்து வந்தனர். மேலும், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கினர்.
கட்சிக்கான நன்கொடையில் வெளிப்படைதன்மை வேண்டும் என்பதற்காகவே, தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது.
இதனால், நன்கொடை முழுதும் கட்சிக்கு சென்றது. இதுதான், இண்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட குடும்ப அரசியல் கட்சிகளுக்கு பிடிக்கவில்லை.
கட்சிக்கு நன்கொடை அளிப்பவர் குறித்த தகவல்கள் ரகசியமாக வைத்திருப்பதற்கும் காரணம் உள்ளது. எங்கள் கட்சிக்கு ஒரு நிறுவனம் நன்கொடை கொடுத்தால், அது கிடைக்காத மாநிலத்தில் உள்ள கட்சியினர், அங்கு அந்த நிறுவனத்துக்கு குடைச்சல் கொடுப்பர்.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலின்போது, எங்கள் கட்சிக்கு, 303 எம்.பி.,க்கள் இருந்தனர்; 17 மாநிலங்களில் ஆட்சியில் இருந்தோம்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின், கட்சிக்கான நன்கொடை அதிகமாக வந்தது. தேர்தல் பத்திரங்களால் அரசின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது என்ற வாதம் சரியல்ல என்பது நிரூபணமாகியுள்ளது.
தேர்தல் பத்திரங்களால், பா.ஜ.,வே பெரும் பலனைப் பெற்றுள்ளது என்று கூறுகின்றனர். அதுபோல, கட்டாய வசூல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
கறுப்புப் பணம்
எங்கள் கட்சிக்கு, 6,200 கோடி ரூபாய் கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு, 1,600 கோடி ரூபாய் கிடைத்தது. இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, 6,200 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே கிடைத்தது.
யாரை மிரட்டி, தங்களுடைய கட்சிக்கு நன்கொடை வசூலிக்கப்பட்டது என்ற விபரங்களை ராகுல் தெரிவிப்பாரா.
தனிப்பட்ட முறையில், கறுப்புப் பணத்தை ஒழிக்க, தேர்தல் பத்திரங்கள் முறை நிச்சயம் பலனளித்தது என்று கூறுவேன். அதனால்தான், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அமித் ஷா மேலும் கூறியுள்ளதாவது:மதச்சார்பற்ற நாட்டில், பல மதங்களுக்கு என, தனித்தனியாக சட்டம் இருப்பது முறையல்ல. அதுதான் தான், பொது சிவில் சட்டத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்படும்.சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இது குடியுரிமை வழங்குவதற்கான சட்டம், குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல.உத்தர பிரதேசத்தில் உள்ள, 80 லோக்சபா தொகுதிகளில், 2014ல் 71 இடங்களில் வென்றோம். கூட்டணி கட்சி, இரண்டு இடங்களில் வென்றது. கடந்த, 2019ல் நடந்த தேர்தலில், 62 இடங்களில் வென்றோம். இந்த முறை, 2014 தேர்தலைவிட அதிக இடங்களில் வெல்வோம்.பிஜு ஜனதா தளம், அகாலி தளம் போன்ற முந்தைய கூட்டாளிகளை, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வரவேற்கிறோம். இது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. அடுத்த சில நாட்களில் முடிவு எட்டப்படும்.மேற்கு வங்கத்தில் உள்ள, 42 தொகுதிகளில், குறைந்தபட்சம், 25ல் வெற்றி பெறுவோம். தென் மாநிலங்களிலும் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம்.ஜம்மு -- காஷ்மீர் சட்டசபைக்கு, செப்., இறுதிக்குள் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி, ''தேர்தல் பத்திரங்களால் பா.ஜ., மட்டுமே பலன் பெற்றதாக கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு, 1,600 கோடி ரூபாயும், இண்டியா கூட்டணிக்கு எங்களைவிட அதிகமாகவும் கிடைத்துள்ளது. கட்டாய