அமெரிக்காவில் தமிழ் மரபிசைக்குழு - “கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம்”

  வலைத்தமிழ்
அமெரிக்காவில் தமிழ் மரபிசைக்குழு  “கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம்”

“தமிழ் மரபிசைக் கருவிகள் காப்போம்,தமிழ்க் கலைகள் வளர்ப்போம்!” என்று முத்தமிழ் இசை  உணர்வோடு அமெரிக்க வாழ் தமிழர்களிடமும் வளரும்  தலைமுறையினரிடமும் தமிழர் மரபிசைக் கருவிகளோடு, தமிழர் கலைகளையும் சேர்த்துப்  பயிற்றுவிக்க மற்றும்நிகழ்த்து கலைகளை அரங்கேற்றவும் முனைவர் விஜயகுமார் முத்துசாமி அவர்களால் அமெரிக்காவின் வெர்ஜீனியா (வாசிங்டன்,DC) மாகாணத்தில் இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமாய் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் “கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம்”. இன்று பல தன்னார்வ கலைஞர்களின்  முயற்சியால் சிறப்பாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் நான் வட அமெரிக்க முருகன் கோவில் சென்றிருந்த போது இருவர் நாதசுவரம் மற்றும் தவில் நன்றாக வாசிப்பதைக் கேட்டு ரசித்தேன். அவர்கள் இருவரும் தமிழ் நாட்டிலிருந்து வரவழிக்கப் பட்ட கலைஞர்கள் என்று நினைத்தேன். ஆனால் தற்போது நான் பல தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதெல்லாம்அவ்விருவர்பல புதிய கலைஞர்களைச் சேர்த்துக் கொண்டு பலவிதமான தமிழ் மரபிசைக் கருவிகளைக் கொண்டு நிகழ்ச்சிகளைச் சிறப்பிப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன். எனவே, அவர்களைப் பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குத் தோன்றியது. “கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம்” நிறுவனர் முனைவர் விஜயகுமார் முத்துசாமி மற்றும் அதன் கலைஞர்களோடு நான் கலந்துரையாடல் செய்ததின் தொகுப்பு இங்கே:

 

முனைவர் விஜயகுமார் முத்துசாமி என்பவர் யார்? அவருக்கும் தமிழர் மரபிசைக்கும் என்னத் தொடர்பு?

விஜயகுமார் அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில்  பிறந்து வளர்ந்தவர். சென்னை ஐஐடி-இல் குவாண்டம் இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இயற்பியல் துறையில் ஜெர்மன் மற்றும் அமெரிக்கா பல்கலைக்கழகங்கள் சென்று வேலை செய்து தற்போது அமெரிக்காவில் முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தன் குடும்பத்தோடு வசிப்பவர்.இப்போது ஐடி- துறையில் பணி புரிகிறார். தன் பிள்ளைகளை பியானோ வகுப்பிற்கு  அனுப்பும் போது தானும் பியானோ கற்க வேண்டும் என்று ஆவல் கொண்டு அவர்களோடு சேர்ந்து பயிற்சி எடுத்துள்ளார். பியானோ பற்றி மேலும் அறிய இணையத்தில் தேடும்போது தமிழர் மரபிசைக் கருவிகள் அழிந்து வருவதாக உள்ள ஒரு காணொளியைக் கண்டிருக்கிறார். இயற்பியல் துறையில் முனைவர் பட்டம், ஐடி- துறையில் பணி என்று வேறொரு திசையில் பயணிக்கும் இவருக்கு மனிதப் பிறப்பின் நோக்கம், ஒருவர் தன் வாழ்நாளுக்குள் சாதிக்க வேண்டிய பயனுள்ள செயல்கள்  என்று ஏதாவது உள்ளதா என்று எண்ணியிருக்கிறார்.தன் பிறப்பிற்கான தனித்துவத்தைத் தாமே அங்கீகரிக்கும் வரை மனிதர்களாய்ப் பிறந்த எவரும் அத்தேடலைத் தன் வாழ் நாள் முழுவதும் தொடரலாம் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்– திருக்குறள்

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும் என்ற குறளிற்கேற்பத் தமிழர் மரபிசைக் கருவிகள் அதன் வரலாறு பற்றியும் தேட முற்பட்டிருக்கிறார்.  பல திறமைகள் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை நாம் எப்போதும் கொண்டிருந்தால் நம் வாழ்வு பல புதிய தேடல்களை நோக்கிச் செல்லும், மேலும் நாம் பற்பல செயல்களை முயல்வதற்கும் வித்திடும் என்பது போல “பறை இசை” கற்க முற்பட்டு ஓக்லஹோமா பல்கலைக்கழக முனைவர் ஜோ சி. ஷெரினியன் (Dr. Zoe C. Sherinian)மூலம் பறை இசைக்கப் பயின்றிருக்கிறார்.முனைவர்ஜோ சி “தமிழ் நாட்டுப்புற இசை எனும் தலித் விடுதலை இறையியல்” (Tamil Folk Music as Dalit Liberation Theology) என்னும் நூல் ஒன்றை எழுதி இந்தியாவில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழர் ஒருவருக்கு அமெரிக்கர் பறை இசை பயிற்றுவிக்கிறார் என்றால் தமிழர் மரபிசை தொன்மையான சிறப்புப் பெற்றது என்பதை உணர்ந்திருக்கிறார்முனைவர் விஜயகுமார். அதுவே பின்னர் “கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம்” உருவாக வித்திட்டது.

 

தமிழர் மரபிசை மற்றும் தொன்மையான இசைக் கருவிகள் யாவை?

குரல் வழி இசை, கருவி வழி இசை என்று இசை எப்படி உருவாகும் எனும் கோணத்தில் இரண்டாகப் பிரிக்கலாம். இசையின் இனிமையைக் கலை வடிவில் நவரச உணர்ச்சிகளையும் தூண்டப் பலவிதமான இசைக் கருவிகளை நம் முன்னோர்கள் உருவாக்கிப் பயன் படுத்தினர். தமிழர் இசைக்கருவிகள், தோல்கருவிகள், காற்றுக்கருவிகள், நரம்புக்கருவிகள் மற்றும் கஞ்சக்கருவிகள் என நான்கு வகைப்படும். தோல்கருவிகள் விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும். காற்றுக்கருவிகள் காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படும். நரம்புக்கருவிகள் மெல்லிய நரம்பு அல்லது தந்திக்களைக் கொண்டது. கஞ்சக்கருவிகள் ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படும்.

தோல்கருவிகள் - பெரும்பறை, சிறுபறை, பெரு முரசு, சிறு முரசு, பேரிகை, படகம், பாடகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, தக்கை, கணப்பாறை, தமடூகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, முரசு, சந்திர வளையம், மொந்தை, பாகம், உபாங்கம், துடி, நாளிகைப்பறை, தமுக்கு, உறுமி மேளம், பறை, முரசு, தம்பட்டம், தமருகம், நகரா, மண் மேளம், தவண்டை, ஐம்முக முழவம், நிசாளம், துடுமை, அடக்கம், தகுணிச்சம், தூம்பு, பேரி மத்தளம், கண்விடு, துடுகை, உடல், உருட்டி, சன்னை, அரைச்சட்டி, கொடுகொட்டி, அந்தலி, அமுதகுண்டலி, அரிப்பறை, ஆகுளி, ஆமந்தரிகை, ஆவஞ்சி, உடல் உடுக்கை, எல்லரி ஏறங்கோள் கோதை, கண்தூம்பு, கணப்பறை கண்டிகை, கல்லல் கிரிகட்டி, குண்டலம் சடடை, செண்டா, சிறுபறை, தகுனித்தம், தட்டை, தடாரி, பதவை, குளிர், கிணை, துடி, பம்பை

காற்றுக் கருவிகள்- புல்லாங்குழல், முகவீணை, மகுடி, சங்கு, தாரை, நாதசுவரம், கொம்பு, ஒத்து, எக்காளம், கொக்கறை, நமரி, திருச்சின்னம், தூம்பு, வயிர்

நரம்புக் கருவிகள்- யாழ், வீணை, தம்பூரா, கோட்டுவாத்தியம், சாரங்கி, பிடில், வில், கின்னாரம்

கஞ்சக் கருவிகள்- கைமணி, சாலரா, சேகண்டி, கஞ்சம் அல்லது கைத்தாளம், கொண்டி, கடம், சேமக்கலம், தட்டுக்கழி

நீங்கள் இக்கருவிகளின் பெயர்களைப் படிக்கும் போது அவை என்னவென்று தெரியாமல் இருந்தால் அக்கருவிகளின் பயன்பாடு குறைந்து அழிந்து கொண்டிருக்கும் கருவிகளின் பட்டியலில் உள்ளது என்று உணரலாம். இப்போது விஜயகுமார் அவர்களின் முயற்சி எத்தகைய பயனுள்ள மேலும் தமிழர்களின் தொன்மையையும் பெருமைகளையும் காக்கும் முயற்சி என்பதை நம்மால் உணரமுடியும்.

அனைத்து மனிதர்களின் வாழ்வோடும் இசை இரண்டறக் கலந்துள்ளது.  இயல், இசை, நாடகம் என்ற முப்பிரிவுகளையும் கொண்டு அமைவதனால் தமிழ் மொழி முத்தமிழ் என்று அழைக்கப்படுகின்றது. தமிழிசையானது இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையுடையதாகும். தமிழிசைத் தொன்மை என்பதைத் தமிழ் மக்களின் வாழ்வோடு இசை இணைந்திருந்தமையைப் பண்டைய இசைக் கருவிகளைக் கொண்டும், தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், அருள்நெறிப் பாடல்கள் போன்ற இலக்கண இலக்கியங்கள் மூலமும் அறிந்து கொள்ளலாம். ஒலித் தொகுதியாகிய இசைக் கலைக்கு முதலிடம் கொடுத்து அதனைப் பற்றி நிற்கின்ற மொழி தமிழ்மொழி.   இசை ஏழின் முதலமைப்பை முறையே தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி என்பது பண்டைய வழக்கம். இந்த இசை ஒலிகளைக் குறிப்பதற்கு, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழு உயிர் நெடில் எழுத்துகளைப் பயன்படுத்தினர். இவை இன்று, ச, ரி, க, ம, ப, த, நி என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏழிசைகளின் அடியாக நூற்றெட்டு பண்கள் தோன்றின. பழந்தமிழர் தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக் கருவி, நரம்புக் கருவி ஆகியவற்றைக் கொண்டு இசைக் கலையை வளர்த்தனர். இசையமைப்பதற்குரிய இலக்கணங்களை வகுத்தனர். இசை ஆய்வுக்கு ஏழிசைச் சங்கம் அமைத்து ஆய்வு செய்தனர். அகத்தியம், பெருநாரை, பெருங்குருகு, பேரிசை, சிற்றிசை, இசைமரபு, இணை நுணுக்கம் போன்ற இசை நாடக நூல்கள் எழுந்தன. இசைக்கு அடிப்படையான சுரங்களையும் சுருதிகளையும் பண் உண்டாக்கும் முறைகளையும் நுணுக்கமாக உருவாக்கிக் கடைப்பிடித்தும் வந்தார்கள்.

 

“கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம்” உருவான ஆண்டு அதன் முதல் நிகழ்ச்சி என்ன?

கொம்பு நிகழ்த்து கலைகள் மற்றும் ஆராய்ச்சி மையம் (Kombu Performing Arts and Research Centre),கொம்பு எனப்படுவது தமிழர் காற்று இசைக்கருவி ஆகும். கொம்பு பண்டைக் காலத்தில் விலங்குகளின் கொம்புகளைப் பயன்படுத்தியும், பின்னர் மூங்கிலாலும், தற்காலத்தில் உலோகத்தாலும் செய்யப்படுகிறது. இது ஒரு தொன்மையான இசைக்கருவி என்பதால் கொம்பு என்ற பெயரில் தமிழர் நிகழ்த்து கலைகள் நடத்தவும் மரபிசைக் கருவிகள் அதன் வரலாறு அகராதி  இவற்றைத் தொடர்ந்து ஆராயவேண்டும் என்ற நோக்கிலும்  ஆராய்ச்சி மையமாக இந்த அமைப்பு 2018-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. முனைவர் விஜயகுமார்முத்துசாமி, சிவசங்கர் சுப்பிரமணியன், சண்முகம் லோகநாதன், கோவிந்தராஜ் கிருஷ்ணன்ஆகியோர் கொம்பு அமைப்பின் அடித்தளமாகத் திகழ்கின்றனர்.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்திலும் வட அமெரிக்க முருகன் கோவிலிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கம் இணைந்து உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை 2019 ஆம் ஆண்டு இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரில் சிறப்புற நடத்தினர். அதில் கொம்பு அமைப்பினர் நடத்திய நிகழ்த்து கலைக்குப் பெரிய வரவேற்பு கிடைத்தது.  அமெரிக்காவில் உள்ள பல தமிழ் அமைப்புகளை அணுக ஓர் ஆரம்பப் புள்ளியாகவும் வழிவகுத்தது. சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை எப்படி இன்றும் பேசப் படுகிறதோ அதே போல சிகாகோ நிகழ்த்து கலை இன்றும் கொம்பின்ஓர் அடையாளமாக உள்ளது.

“கொம்பு” அமைப்பில் இதுவரை எத்தனை இசைக்கருவிகள் உள்ளன. அதனை எங்கிருந்து வாங்குகிறீர்கள் எப்படி பராமிக்கிறீர்கள்?

தமிழ் நாட்டில் இசைக்கருவிகள் செய்வதைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பங்களிடமிருந்து வாங்குகிறோம். பறை மற்றும் சில இசைக்கருவிகளை அமெரிக்காவில் உள்ள பல தமிழ் அமைப்புகளுக்குப் பயிற்சி அளித்து வழங்கி இருக்கிறோம். இசைக்கருவிகளை பராமிப்பது மற்றும் நன்றாக மெருகேற்றுவது போன்ற முயற்சிகளையும் எங்கள் கலைஞர்களே செய்கிறார்கள். எங்களிடம் தற்போது கீழ்க்கண்ட இசைக்கருவிகள் உள்ளன.

தோல்கருவிகள் –பறை, சிறுபறை, முரசு, சிறு முரசு, பேரிகை, படகம், உடுக்கை, மத்தளம், திமிலை, தமுக்கு, உறுமி, தம்பட்டம், மண் மேளம், துடுக்கை, உருட்டி, சன்னை, அரைச்சட்டி, கொடுகொட்டி, உடல் உடுக்கை, கணப்பறை  குண்டலம் சடடை, செண்டா, சிறுபறை, தட்டை, தடாரி, பதவை,  கிணை, துடி, பம்பை

காற்றுக் கருவிகள் - கொம்பு, புல்லாங்குழல், மகுடி, சங்கு, தாரை, நாதசுவரம், ஒத்து, எக்காளம், கொக்கறை, நமரி, திருச்சின்னம், தூம்பு

நரம்புக் கருவிகள் - வில், கோட்டுவாத்தியம், சாரங்கி, பிடில், கின்னாரம்

கஞ்சக் கருவிகள் - கைமணி, சாலரா, சேகண்டி, கஞ்சம், கைத்தாளம், கொண்டி, கடம், சேமக்கலம், தட்டுக்கழி

இந்த அமைப்பில் நடத்தப்படும் பயிற்சிப்பட்டறைகள் எவ்வாறு இருக்கும்.  இதுவரை எத்தனை கலைஞர்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர்?

புதிதாக வரும் கலைஞர்கள் பறை, தவில், நாதசுவரம் போன்ற கருவிகளை வாசிக்கப் பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்படுகின்றன. முதலில் கருவிகளைப் பயன்படுத்தத் தடுமாறினாலும் இப்போது கைதேர்ந்த பயிற்சியாளர்கள் பலர் உள்ளதால் எளிதில் புரியும் படி செயல் பயிற்சிகளை அளிக்கின்றனர்.  பயிற்சி பெற்றவர்கள் தொடர்ந்து ஆர்வம் கொண்டு எங்களோடு இணைகின்றனர். மேலும் பலர் எங்களிடம் பயிற்சி பெற்று அவர்கள் வாழும் மாகாணங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழ் மரபிசை கருவிகளை வாசிக்கின்றனர்.

எங்களுடன் புதிதாகச் சேரும் தன்னார்வலர்களுக்கு இசைப் பின்னணியோ அல்லது இசைக்கருவிகள் வாசிக்கும் முன்அனுபவமோ பெரும்பாலும் இருக்காது. இவர்களில் பெரும்பாலானோர் ஐடி துறையில் பணிபுரிபவர்கள். ஒவ்வொரு இசைக்கருவிகளிலும் பயிற்சி பெற்று தொழில்முறை கலைஞர்களாக மாறுவதற்கு அவர்கள் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். தமிழ் மரபிசையை அடுத்து தலைமுறைக்குக் கொண்டு செல்லும் இவர்களின் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. 

கொம்பு குழு கலைஞர்கள் விவரம்: முனைவர் விஜயகுமார்முத்துசாமி, சிவசங்கர் சுப்பிரமணியன், சண்முகம் லோகநாதன், கோவிந்தராஜ் கிருஷ்ணன்,ராஜராஜன் லோகநாதன், திலீபன் பழனியப்பன், பானுப்ரியாதிலீபன், இனியா திலீபன், ஹர்ஷினி சிவசங்கர், பீஜய் பாஸ்கர் புடிபெட்டி, ஜோஷிதா நந்தா, ரேயா S குமார், கண்மணி ஜெயப்பிரகாஷ், ஹரி ரெங்கராஜு, பத்மாவதி ஹரி, சுகன்யா சண்முகம், ஸ்ரீகணேஷ் சத்தியமூர்த்தி, ரேவதி சுப்ரமணியன், கதிர்வேல் குழந்தைவேல், சோமசுந்தரம் முனியப்பன், எழில் முருகவேலு.

மேலும் இவர்களின் குடும்பத்தினரும் மற்றும் பல தன்னார்வலர்களும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற பேருதவியாக உள்ளனர்.    

 

“கொம்பு” அரங்கேற்றும் நிகழ்த்து கலைகள் பற்றி கூறமுடிமா?

பறை, தவில், நாதசுவரம், உடுக்கை, சாலரா, சங்கு போன்ற இசைக்கருவிகள் கொண்டு இன்றைய ரசிகர்களைக் கவர இசைவிருந்து அளிக்கிறோம். பொய்க்கால் குதிரை, காவடி, கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தேவராட்டம், காளையாட்டம் போன்றவற்றையும் மேடையேற்றுகிறோம். இதற்கென எங்களுடைய கலைஞர்கள் அவர்கள்  நேரம் ஒதுக்கிப்  பல பயிற்சிகளை எடுக்கின்றனர்.

 

அமெரிக்காவின் எந்தெந்த மாகாணங்களில் கொம்பு நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது?

வாசிங்டன் டிசி, வெர்ஜீனியா, மேரிலாந்து, இலினாய்ஸ், பென்சில்வேனியா, டெலிவேர், நியூஜெர்சி, நியூயார்க், டென்னசி, டெக்சாஸ், வட கரோலினா, மிச்சிகன், ஓஹியோ ஆகிய மாகாணங்களில் உள்ள தமிழ் அமைப்பு நிகழ்ச்சிகளில் தமிழ் இசைக்கருவிகள் வாசித்துள்ளோம். மற்றும் பல மாகாணங்களில் பயிற்சிப்பட்டறைகள், நிகழ்த்து கலைகள் நடத்தவும் ஏற்பாடுகள் உள்ளன.

 

கொம்பு ஆராய்ச்சி மையம் செய்த மற்றும் செய்ய முயலும் ஆராய்ச்சிகள் என்ன?

தமிழின் சங்க இலக்கியங்களில், பல வாத்தியக் கருவிகளின் பெயர்களையும், அதற்கு இணையான நடன வகைகளின் குறிப்புகளையும் காணலாம். இயற்கைச் சீற்றம் மற்றும் பிற இடர்களால், பல நுண்கலைகள் வழக்கொழிந்துள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி, உலகமயமாதல் ஏற்படுத்திய பண்பாட்டுப் பரவல் காரணமாக, திரை இசைப் பாடல்கள், நடனம், உலக அரங்குகளில் ஒலித்தாலும், நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் நசிந்து கொண்டுதான் இருக்கின்றன. பல கலை மரபுகள் வர்த்தக ரீதியாக, ஒரு சமூகம் அல்லாது மற்றவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை. கற்றுக் கொள்வோரும் பொருளாதாரம் காரணமாக, அவற்றைக் கற்க ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், அவை மறைந்து போகும் சூழல் ஏற்படுகிறது. 'கொம்பு' மரபிசை மற்றும் ஆராய்ச்சி மையம், பழங்கலைகளை மீட்டெடுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. அத்துடன் தமிழ் மரபிசை சார்ந்த, இசைக் கருவிகளை மையப்படுத்தி ஆய்வு செய்து வருகிறது. பம்பை, உறுமி, செண்டை, திருச்சின்னம், கொம்பு, உடுக்கை, தமக்கு, சின்னமேளம், பெரியமேளம், பறை, தவில், நாதசுவரம் போன்ற இசைக்கருவிகளில் பொதிந்துள்ள அறிவியலை  ஆவணப் படுத்தி இசை அகராதி ஒன்றைத் தயாரிக்க முயல்கின்றது. இசைக்கருவிகள் மட்டுமின்றி, நிகழ்த்து கலைகளான பொய்க்கால் குதிரை, காவடி, கரகம், மயிலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தேவராட்டம், காளையாட்டம் போன்ற பல வகையான நடனக் கலைகளுக்கான கலைப்பொருட்களை மீட்டெடுத்து இன்றைய தலைமுறையினரைக் கொண்டு மேடையேற்றி வருகிறது. இசைச்சொற்களையும், நடன அடவுகளையும், தொழில்நுட்ப உதவியோடு ஆவணப்படுத்தும் கலைக்களஞ்சியம் உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தமிழ் பாரம்பரியப் பறை கருவிகளை அமெரிக்காவின் பல தமிழ் அமைப்புகளுக்குச் சென்று சேர்த்துள்ளது.

தமிழ் மரபிசைக் கருவிகளைப் பரிணாம வளர்ச்சி செய்தால் இன்றைய தலைமுறையினரை எளிதில் சென்றடைய முடியும்.  கொம்பு இது போன்ற எல்லா ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகிறது.இதுவரை கொம்பு வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளின் இணைய முகவரி இங்கே:

https://issuu.com/ijraset/docs/33267

https://irjt.iorpress.org/index.php/irjt/article/view/266

 

நீங்கள் இதுவரை சந்தித்த சவால்கள் என்ன?

ஒரு முக்கிய சவால் என்பது திறமைமிக்க கலைஞர்கள், கைவினைஞர்களின் எண்ணிக்கையின்மை. பாரம்பரிய இசைக் கருவிகளை உருவாக்குவது ஒரு கடினமான செயலாகும்.இதை மேற்கொள்ள விரும்புவர்கள் குறைவதால், இந்தத் தொழில்கள் அழியும் சூழல் உள்ளது. மற்றொரு பிரச்சனை மூலப்பொருட்கள் இப்போது கிடைப்பதில்லை, சரியான வகை மரத்தைப் பெறுவது  சுற்றுச்சூழல் மாற்றங்களால் மிகவும் கடினமாகிறது.

திருவாரூர் சிவபெருமானின் கோவிலில் ஐமுக முழவம் வாசிக்கப்படுகிறது. இந்த வாத்தியம் ஒரு சில மட்டுமே உள்ளன. இதனை உருவாக்கும் குறிப்பு அடங்கிய ஓலைச்சுவடி  ஐமுக முழவம் வாசிக்கும் குடும்பத்தாரிடம் உள்ளதை அறிந்து அதன் அறிவியலை ஆவணப்படுத்தத் தொடர்பு கொண்டபோது அந்தக் குடும்பம் ஓலைச்சுவடியைப் படிக்கத் தர மறுத்தது. இதுபோல் பல குடும்பங்களின் கட்டுப் பாட்டில் தமிழ் மரபிசைக் கருவிகளின் குறிப்புகள் முடங்கி அதன் தயாரிப்புக்கள் முடக்கப்படுகின்றன.

இக்கட்டுரையின் வாயிலாக நாங்கள் வேண்டுவது அவர்களைத் தொடர்பு கொண்டு தமிழ் மரபிசைக் கருவிகளின் குறிப்புகளை வெளியுலகிற்குக் கொண்டு வாருங்கள், மேலும் அதனை மீட்டெடுக்கும் முயற்சியில் பங்கு பெறுங்கள் என்பதே.

 

கொம்பு அமைப்பின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் குறிக்கோள்கள் என்ன?  

தமிழ் மரபிசை கருவிகளின் தேவை பெருக, பள்ளிகள், கம்யூனிட்டி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாடங்களை கொண்டு வர அரசாங்கத்தை அணுகுவோம். ஷென் யுன் (Shen Yun Performing Arts) அமைப்பு போல, தமிழ் மரபிசை நிகழ்த்து கலைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் முயற்சிகளை “கொம்பு” மேற்கொள்ளும். ஓலைச்சுவடிகள் மற்றும் குறிப்புகளைச் சேகரித்து தமிழ் மரபிசைக் கருவிகளின் பேட்டர்ன்களை பெற விழைவோம். ரொனால்ட், யமஹா போன்ற நிறுவனங்கள் இசைக் கருவிகளின் பேட்டர்ன்களை வைத்து இசைக் கருவிகளைத் தயாரிக்கிறார்கள். அதுபோன்ற

முன்னேற்பாடுகளை செய்து எளிய முறையில் பயன் படுத்தும் வகையில் தமிழ் மரபிசைக் கருவிகளை உருவாக்க முற்படுவோம்.

நாங்கள் நம்முடைய இசையையும், இந்தக் கருவிகளை உருவாக்கும் முறைகளையும் காணொளிகள் மற்றும் ஆய்வுக்கட்டுரை வெளியீடுகள் மூலமாகவும் ஆவணமாக்கத் தொடங்கியுள்ளோம். இது விழிப்புணர்வைப் பரப்புவதிலும், எதிர்காலத் தலைமுறைகளுக்காக அறிவை பாதுகாக்கவும்  உதவுகிறது. பாரம்பரியக் கைவினைஞர்களுடன் பணியாற்றி, இளம் தலைமுறையினரை இந்தத் தொழில்களை கற்கச் செய்கிறோம். இதனால் இந்தத் திறமைகள்  மாயமடையாமல் பாதுகாக்க வழிவகை செய்வோம்.

 

கொம்பு அமைப்பு பெற்ற பாராட்டுக்கள் மற்றும் அங்கீகாரங்கள் என்ன?  

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகளுக்குத் தமிழ் நாட்டிலிருந்து பல சிறப்பு விருந்தினர்கள் வந்திருக்கின்றனர். அவர்கள் எங்களின் நிகழ்த்து கலைகள் கண்டு வெகுவாகப் பாராட்டி உள்ளனர். உலகத் தமிழ் ஆய்வு மன்றம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளோம். அண்மையில் டென்னிசி தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா மற்றும் நெப்போலியன் அவர்களும் எங்களின் நிகழ்த்து கலைகள் பற்றி மேடையில் பாராட்டிப் பேசினர்.

எங்களின் கலை நிகழ்ச்சிகளைக் காணும் பார்வையாளர்கள் எங்கள் பயிற்சிப் பட்டறைகளில் சேர்ந்து பயிற்சி பெற்றபின் எங்கள் கொம்பின் ஓர் அங்கமாகவும் மாறுகிறார்கள். இது எங்களின் மிக உயர்ந்த வெகுமதியும் அங்கீகாரமும் ஆகும். மேலும், பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் ஈர்க்கப்பட்டு எங்களுடன் இணைகின்றனர். இந்த தமிழ் மரபிசைக் குழுவை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதே எங்கள் முக்கிய நோக்கம், இது நடப்பது கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

 

தமிழர் அல்லாத மற்ற நிறுவனங்களில் கொம்புநடத்திய நிகழ்ச்சிகள்என்ன?  

நமது பாரம்பரிய இசைக் கருவிகளைப் புதிய வெளிச்சத்தில் ஒளிர வைக்கும் கலவை (Fusion) இசையை உருவாக்குகிறோம். சர்வதேச இசைக்கலைஞர்களுக்கு இணையாக நிகழ்ச்சிகள் நடத்த முயல்கிறோம். நவீன இசை பாணிகள் பாரம்பரிய வடிவங்களை ஒடுக்குவதால், தமிழர் அல்லாதவர்களை ஈர்ப்பது சிரமமாகிறது. இருப்பினும், பாரம்பரிய இசையை நவீனக் கூறுகளுடன் இணைப்பதன் மூலம், அதைப் பொருத்தமானதாகவும், மனதிற்கினியமாகவும் மாற்ற முடியும் என்று நாங்கள் நம்பி அதற்கு இணையான நிகழ்ச்சிகளையும் செய்கிறோம். கேபிட்டல் ஒன், விசா மற்றும் பல கார்ப்பரேட் நிறுவனங்களில் தமிழர் அல்லாதவர்களையும் கவரும் வண்ணம் நிகழ்த்து கலைகள் நடத்தியுள்ளோம்.  

மேலும் குடுப்பங்களில் நடக்கும் சடங்கு மற்றும் திருமணங்களிலும் நிகழ்த்து கலைகள் நடத்துகிறோம்.

 

கொம்பு அமைப்பு தொண்டு நிறுவனமாக என்ன உதவிகளை செய்துள்ளது?

நாங்கள் எங்கு கலை நிகழ்த்தினாலும்எங்களின் நன்கொடைகள் எங்கள் இலாப நோக்கமற்ற வங்கிக் கணக்கிற்குத் தான் செல்லும். அதனைக் கொண்டு பாரம்பரிய இசைக் கருவிகளை வாங்கி மற்றவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். 

கோவிட் காலத்தில், தமிழ்நாட்டின் பல கலைஞர்கள் தங்கள் வருமானத்தைப் பல மாதங்களாக இழந்த போது அவர்களுக்கு உறுதுணையாக, அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளை நடத்தி, தமிழகத்தில் உள்ள அந்தக் குடும்பங்களுக்கு ஆதரவளித்தோம். மேலும், பல இசைக் கலைஞர்களோடு தொடர்பில் இருந்து கொண்டு அவர்களை எங்களின் பயிற்சிப்பட்டறைகள் நடத்த வாய்ப்பளிக்கிறோம்.

 

இக்கட்டுரை வாயிலாக நீங்கள் இதைப் படிப்பவர்களிடம்  வேண்டுவது என்ன?

நன்றி. எங்கள் பயணத்தை அனைவருடன் பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழ் மரபிசையைக் கொண்டாடவும், பாதுகாக்கவும் மேலும் பலர் எங்களுடன் சேருவார்கள் என்று நம்புகிறோம். இன்னும் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே தமிழ் மரபிசைக்கருவிகள் தயாரிப்பின் இரகசியங்களைக் கட்டுப்படுத்துகின்றன. அவற்றைப் பாதுகாத்து அனைவருக்கும் கிடைக்கச் செய்ய நமது அரசும் பொதுமக்களும் முன்வர வேண்டும்.தமிழ் மரபிசைக்கருவிகளின்  பயன்பாட்டை மேம்படுத்த சாதி, மத பேதங்கள் கடந்து அனைவரும் கற்க முன்வரவேண்டும். தமிழ் மரபிசை நிகழ்ச்சிகளுக்குப் பொதுமக்கள் முக்கியத்துவம் அளிக்க  வேண்டும். தமிழ் மரபிசையைப் பாதுகாப்பதில் அனைவரின் ஆதரவும் கிடைக்கட்டும் என்று வேண்டுகிறோம்.எங்களைத் தொடர்புகொள்ள மின்னஞ்சல்இதோ இங்கே:[email protected] .

இக்கட்டுரையைத் தொகுத்து எழுத  எனக்குப்  போதிய தகவல்கள் அளித்த அனைத்து கொம்பு தமிழ்மரபிசைக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! நமது தொன்மையான  தமிழ் மரபிசையைப்  பாதுகாப்பதில் கொம்பு கலைஞர்கள் காட்டும் உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்பும் உண்மையான உழைப்பும்  பாராட்டுதலுக்குரியது. இசையின் மூலம் நமது கலாச்சாரத்தின் சாரத்தை மீட்டெடுக்கும் அவர்களின் முயற்சிகள் உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. ஒவ்வொரு கருவியின் வரலாறு மற்றும் நுணுக்கங்களை ஆராய்ந்து விளக்குவதன் மூலம், அவை அறிவியலின் வழியாகப் பயணிக்க உதவி நம் முன்னோர்களின் கலை வடிவங்களை முன்னிலைப்படுத்துவது  மட்டுமல்லாமல்தமிழர்களின் அறிவுசார் சமூகத்தை உலகிற்கு  பறைசாட்டுகிறது. கொம்பின் நற்பணிகள்  தொடரட்டும், வாழ்த்துகள்!

 

தொகுப்பு முருகவேலு வைத்தியநாதன்

மூலக்கதை