மேஜர் லீக் கிரிக்கெட்: எம்.ஐ. அணியை வீழ்த்தி குவாலிபயர் 2-க்கு தகுதி பெற்ற சூப்பர் கிங்ஸ்

  தினத்தந்தி
மேஜர் லீக் கிரிக்கெட்: எம்.ஐ. அணியை வீழ்த்தி குவாலிபயர் 2க்கு தகுதி பெற்ற சூப்பர் கிங்ஸ்

டல்லாஸ், இறுது கட்டத்தை எட்டியுள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்றின் முடிவில் வாஷிங்டன் ப்ரீடம், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ், டெக்சார் சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்.ஐ.நியூயார்க் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர்ட் கிங்ஸ் - எம்.ஐ. நியூயார்க் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ. நியூயார்க் அணி ரஷீத் கானின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரஷீத் கான் 55 ரன்களும், மோனக் படேல் 48 ரன்களும் அடித்தனர். டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் மற்றும் அரோன் ஹார்டி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 164 ரன்கள் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன டேவான் கான்வே - பாப் டு பிளெஸ்சிஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பாப் டு பிளெஸ்சிஸ் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஆரோன் ஹார்டி அதிரடியாக விளையாடினார். மறுபுறம் கான்வே அரைசதம் அடித்தார். வெறும் 18.3 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 167 ரன்கள் அடித்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எம்.ஐ.நியூயார்க் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குவாலிபயர் 2-க்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. எம்.ஐ. நியூயார்க் எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

மூலக்கதை