வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா

  வலைத்தமிழ்
வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா

வட அமெரிக்கா முருகன் கோவில் மேரிலாந்து வாசிங்டன் வட்டாரத்தில் உள்ளது. இங்கு ஜூன் 7-ஆம் நாள் சனிக்கிழமை அன்று இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நல்லூர் முருகன் தேர்த்திருவிழா என்பது இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள நல்லூர் கந்தசாமி கோவிலில் நடைபெறும் மிகச் சிறந்த பண்டிகை ஆகும். இவ்விழாவின் முக்கிய அம்சம் தேர் உற்சவம் ஆகும். இதில் சுவாமி முருகன் திருவீதியில் தேர் மீது கொண்டுவரப்படுகிறார். நல்லூர் தேர்த்திருவிழா மக்கள் ஒருங்கிணைப்பையும், பக்தியையும், மற்றும் கலாச்சார அடையாளத்தையும் வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இலங்கை தமிழ் மற்றும் இந்தியத் தமிழ் பக்தர்கள் அமெரிக்காவின் பல மாகாணங்களிலிருந்து மேரிலாந்து வாசிங்டன் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவிலில் ஒன்று கூடி இரண்டு தினங்கள் தங்கிப் பங்கேற்கின்றனர். அலகு குத்துதல், காவடியாட்டம் எனப் பலவித மதச்சடங்குகள், ஆராதனைகள், மற்றும் பலவித கலாச்சார நிகழ்வுகள் இதில் அடங்கும். பக்தர்கள் அனைவருக்கும் பல்சுவை விருந்தும் அளிக்கப்பட்டது.

வட அமெரிக்கா முருகன் கோவில் ஒரு ஆராதனை மையமாக மட்டும் இல்லாமல் அமெரிக்க வாழ் தமிழர்களை இணைக்கும் ஒரு முக்கிய பாலமாகவும் செயல்படுகிறது. மேலும், சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஒரு பிணைப்பாக இருக்கிறது. இதனால், வட அமெரிக்காவின் முருகன் கோவில் தமிழர்கள் ஒற்றுமை மற்றும் தமிழ்க் கலாச்சாரத்தைப் பராமரிக்கவும், உலகம் முழுவதும் பரப்பவும் ஒரு முக்கிய சக்தியாக விளங்குகிறது.

– முருகவேலு வைத்தியநாதன்

மூலக்கதை