கெஜ்ரிவால் உடல்நிலை விவகாரம்: டெல்லியில் இந்தியா கூட்டணி 30-ந்தேதி போராட்டம்

  தினத்தந்தி
கெஜ்ரிவால் உடல்நிலை விவகாரம்: டெல்லியில் இந்தியா கூட்டணி 30ந்தேதி போராட்டம்

புதுடெல்லி,டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.அதேவேளை, டெல்லி மதுபான கொள்ளையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும், சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சிபிஐ கைது செய்தது. கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் கோர்ட்டில் மனுதாக்கல் செய்து வருகிறார்.அந்த வகையில் அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20-ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஜூலை 12-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் சிபிஐ பதிவு செய்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இன்று அவர் காணொலி காட்சி வாயிலாக திகார் சிறையில் இருந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறையில் அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.இந்த நிலையில், திகார் சிறை நிர்வாகம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் வருகிற 30-ந்தேதி இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு உரிய சிகிச்சை தர வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.INDIA bloc to stage a protest on 30th July at Jantar Mantar in Delhi, over the health of CM Arvind Kejriwal who is lodged in jail: Aam Aadmi Party (AAP)

மூலக்கதை