பள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

  தினத்தந்தி
பள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி  முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி பின்னர் தன்னுயிர் நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்துவந்த காங்கேயம், சத்யா நகரைச் சேர்ந்த சேமலையப்பன் (வயது 49) என்பவர் நேற்று (24.07.2024) மாலை பள்ளி முடிந்தவுடன் பள்ளிக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு கோவை திருச்சி நெடுஞ்சாலை வெள்ளக்கோவில் பழைய காவலர் குடியிருப்பு அருகே வந்துகொண்டிருந்தபோது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக தான் ஓட்டிவந்த பள்ளி வாகனத்தில் இருந்த பள்ளிக் குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில் பத்திரமாக நிறுத்தி பின்னர் உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும் தன் பொறுப்பிலிருந்த பள்ளிக் குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர் தனது இன்னுயிரை இழந்த சேமலையப்பன் அவர்களின் கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் நாம் தலைவணங்கி போற்றுகிறோம். காலம் சென்ற பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ரூபாய் ஐந்து லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை