இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?  லங்காசிறி நியூஸ்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு (CIABOC) வெளியிட்டுள்ளது. இலங்கையின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 89வது பிரிவின்படி அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தங்களது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளின் நகல்களை தேர்தல் ஆணையத்திடம் வேட்புமனுவுடன் ஒப்படைத்துள்ளனர். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பிரதான வேட்பாளர்களில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிக குறைந்தளவான சொத்துக்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி வேட்பாளர்கள் சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளுக்கமைய இந்த தகவல் தெரியவந்துள்ளது.சொத்துப் பிரகடனங்களின்படி, ஏனைய பிரதான வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில், அதிபர் திலித் ஜயவீர மற்றும் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் நிதி ரீதியாக நல்ல நிலையில் உள்ளதாகத் தெரிகிறது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் போட்டியிடும் ஜெயவீர, அதிகபட்ச மாத வருமானம் ரூ.16,500,000 ஆகும். சொத்து அறிக்கைகளின்படி, அவர் One Galle Face இல் ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பையும், ஹோட்டல் தொழில் உட்பட பல்வேறு வணிகங்களில் கணிசமான எண்ணிக்கையிலான பங்குகளையும், ரூ.30 மில்லியன் மதிப்புள்ள நகைகளையும் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது.தேசிய ஜனநாயக முன்னணிக்காக (NDF) போட்டியிடும் விஜயதாச ராஜபக்ஷவின் மாதாந்த வருமானம் ரூ.1,345,000 எனவும் இதில் லோட்டஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து 1,000,000 ரூபாயும், அமைச்சர் பதவியில் இருந்து 65,000 ரூபாயும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்து 280,000 ரூபாயும் பெறுகிறார். Toyota V8 jeep , 9 ஏக்கர் தென்னந்தோப்பு மற்றும் டெல்கஹாவத்தையில் ரூ.40 மில்லியன் பெறுமதியான சொத்தை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாதாந்த சம்பளம் ரூபா 97,500 மற்றும் பாராளுமன்ற ஓய்வூதிய கொடுப்பனவாக 82,191.66 ரூபாவை பெறுவதாக கூறியுள்ளார்.அவரது சொத்துக்களில் பணத்தொகையில் ரூ.40,000 மற்றும் ரூ.325,000 பெறுமதியான தங்கம் மற்றும் குருநாகல், கொழும்பு 7, ராஜகிரிய ஆகிய இடங்களில் சொத்துகளும் வைத்துள்ளார்.இதன்படி, விக்கிரமசிங்கவின் மொத்த மாத வருமானம் ரூ.177,316 ஆகும், இது முன்னணி வேட்பாளர்களில் மிகக் குறைவானதாகும்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) சேர்ந்த நாமல் ராஜபக்ச, தனது பாராளுமன்ற கடமைகளின் மூலம் மாதாந்த வருமானம் ரூபா 54,285 மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் ரூ. 400,000 பெறுகிறார்.அவரது சொத்துகளில் சுமார் ரூ.8.5 மில்லியன் மதிப்புள்ள தங்கம், சுமார் ரூ.14.2 மில்லியன் மதிப்புள்ள ரத்தினங்கள் உள்ளன.எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மாதந்தம் 2 இலட்சத்து 95 ஆயிரத்து 681 ரூபாவையும் பெறுகிறார். தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 2 இலட்சத்து 56 ஆயிரத்து 802 ரூபாவையும் வருமானமாக ஈட்டுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் குறித்த தரப்பினர் சமர்ப்பித்த சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை