புதிய உச்சத்தில் வர்த்தகத்தை தொடங்கிய இந்திய பங்குச்சந்தை
மும்பை,இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் பெரிய மாற்றம் இல்லாவிட்டாலும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. ஆனால், கடந்த 4 நாட்களாக இந்திய பங்குச்சந்தை சரிவை காணாமல் உச்சம் பெற்று வர்த்தகமாகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று காலை புதிய உச்சத்தில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 502.42 புள்ளிகள் உயர்ந்து 82,637.03 என்ற புதிய வரலாற்றை எட்டியது. அதேபோல நிப்டி 105.7 புள்ளிகள் உயர்ந்து 25,257.65 என்ற புதிய சாதனை உச்சத்தை எட்டியது.சென்செக்ஸ் குறியீட்டில், பஜாஜ் பின்சர்வ், எச்.டி.எப்.சி வங்கி, டைட்டன், பஜாஜ் பைனான்ஸ், என்.டி.பி.சி., பவர் கிரிட், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை ஈட்டின. எனினும், டாடா மோட்டார்ஸ் மற்றும் சன் பார்மா ஆகியவை பிந்தங்கியுள்ளன. ஆசிய சந்தைகளில், சியோஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை ஏற்றத்துடன் வர்த்தகமாகின. நேற்று அமெரிக்க சந்தைகள் கலவையான குறிப்பில் முடிவடைந்தன.அந்நிய முதலீட்டாளர்கள் நேற்று ரூ.3,259.56 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். அதேபோல உள்நாட்டு நிதி நிறுவன முதலீட்டாளர்களும் ரூ.2,690.85 கோடி மதிப்புள்ள பங்குகளை வங்கியுள்ளனர்.