மகாதீர் ஆலோசகர்: பொருளியலை மேம்படுத்த ஒன்றிணையும் எதிர்க்கட்சி மாநிலங்கள்
கோலாலம்பூர்: எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்காத்தான் நேஷனல் வசம் உள்ள மலேசியாவின் நான்கு மாநிலங்கள் அவற்றின் பொருளியலை மேம்படுத்த ஒன்றிணைந்துள்ளன.அதுமட்டுமல்லாமல், மலாய்க்காரர்கள் அதிகமுள்ள அந்த மாநிலங்களில் தங்கள் நிலையை வலுப்படுத்த அக்கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.இவர்களுக்கு ஆலோசகராக முன்னாள் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது செயல்படுகிறார்.முதலீட்டாளர்களை ஈர்த்து பொருளியலை மேம்படுத்த திரங்கானு, கிளந்தான், கெடா, பெர்லிஸ் ஆகிய நான்கு மாநிலங்களும் புதிய முதலீட்டு நிறுவனம் ஒன்றை அமைத்துள்ளன.புதிய நிறுவனத்துக்கு எஸ்ஜி4 எனப் பெயரிடப்பட்டுள்ளது.“கூட்டரசு அரசாங்கத்தை நாங்கள் அவமதிக்கவில்லை, எதிர்க்கவில்லை. நாட்டிற்குக் கிடைக்கும் வளங்கள், வருவாய் ஆகியவற்றில் இந்த நான்கு மாநிலங்களுக்கும் நியாயமான பங்கு வழங்கப்படவில்லை. எனவே, இந்த மாநிலங்களை மேம்படுத்த புதிய முதலீட்டு நிறுவனம் ஒன்றை அமைத்துள்ளோம்,” என்று செப்டம்பர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற எஸ்ஜி4 உச்சநிலை மாநாட்டில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் 99 வயது டாக்டர் மகாதீர்.இதுவே இந்நிறுவனத்தின் முதல் உச்சநிலை மாநாடு.இந்த மாநாடு சிலாங்கூர் மாநிலத்தின் பாங்கி நகரில் நடைபெற்றது.புதிய முதலீட்டு நிறுவனத்தில் பெரிக்காத்தான் நேஷனல் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் 25 விழுக்காடு பங்கு உண்டு.தென்கொரியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து முதலீட்டாளர்களை எஸ்ஜி4 நிறுவனம் ஈர்த்துவிட்டதாக திரங்கானு முதல்வர் சம்சுரி மொக்தார் தெரிவித்தார்.உச்சநிலை மாநாட்டில் திரங்கானு, கிளந்தான், கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களும் நான்கு மாநிலங்களின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.அவர்களுடன் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கும் டாக்டர் மகாதீர் முகம்மதும் கலந்துகொண்டனர்.