ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்குத் திரும்புகிறார் டிராவிட்

  தமிழ் முரசு
ஐபிஎல்: ராஜஸ்தான் அணிக்குத் திரும்புகிறார் டிராவிட்

ஜெய்ப்பூர்: இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் அணிகளுள் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுநராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.இந்திய அணியின் முன்னாள் தலைவரான டிராவிட், இவ்வாண்டு ஜூன் மாதம் நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன் அவ்வணியின் தலைமைப் பயிற்றுநர் பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில், ராஜஸ்தான் அணியுடன் அண்மையில் அவர் ஒப்பந்தம் செய்துகொண்டதாக இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ இணையத்தளச் செய்தி கூறுகிறது. இதற்கு முன்னரும் ராஜஸ்தான் அணியுடன் இணைந்து செயல்பட்டுள்ளார் டிராவிட். கடந்த 2012, 2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர்களின்போது தலைவராக இருந்து அவ்வணியை வழிநடத்திய டிராவிட், அதற்கடுத்த இரு பருவங்களில் அவ்வணியின் இயக்குநராகவும் மதியுரைஞராகவும் செயல்பட்டார்ராஜஸ்தான் அணியின் இப்போதைய தலைவர் சஞ்சு சாம்சனுடன் டிராவிட்டுக்குப் பணிசார்ந்த நல்ல உறவுமுறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன், டிராவிட் இந்திய அணிப் பயிற்றுநராக இருந்தபோது அவ்வணியின் பந்தடிப்புப் பயிற்றுநராக இருந்த விக்ரம் ரத்தோரும் ராஜஸ்தான் அணியுடன் இணையக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. இதனிடையே, கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் ராஜஸ்தான் அணியின் இயக்குநராக இருந்துவரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரா, மற்ற லீக் தொடர்களில் பங்குகொள்ளும் அக்குழும அணிகளைப் பார்த்துக்கொள்வார் எனக் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக்கில் பார்ல் ராயல்ஸ் அணியும் கரீபிய பிரிமியர் லீக்கில் பார்பேடாஸ் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. முதன்முறையாக 2008ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி வாகை சூடியது. அதன்பின் 2022ஆம் ஆண்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியபோதும் அதன் வெற்றிக்கனவு நனவாகவில்லை.

மூலக்கதை