வியட்னாமை நோக்கி நகர்ந்த சீனாவைப் புரட்டிப் போட்ட ‘யாகி’ புயல்

  தமிழ் முரசு
வியட்னாமை நோக்கி நகர்ந்த சீனாவைப் புரட்டிப் போட்ட ‘யாகி’ புயல்

பெய்ஜிங்: இவ்வாண்டில் ஆசியாவின் மிகச் சக்திவாய்ந்த புயலாகக் கருதப்படும் ‘யாகி’ புயல், சனிக்கிழமையன்று (செப்டம்பர் 7) வியட்னாமின் வடக்குக் கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்தது. முன்னதாக, சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஹைனான் மாநிலத்தை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) இப்புயல் தாக்கியது. அங்கு மின்னல் தாக்கம், பலத்த காற்றுடன் கனமழை ஆகியவற்றை ஏற்படுத்தியது. கிலோ மீட்டருக்கு 234 வேகத்தில் வீசிய காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 800,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.‘யாகி’ புயலுக்குக் குறைந்தது இருவர் பலியாகினர் என்றும் 92 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டு அரசு ஊடகம் செப்டம்பர் 7ஆம் தேதி கூறியது. ஹைகோவில் உள்ள இப்பகுதியின் முக்கிய விமான நிலையம் செப்டம்பர் 7 ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை மூடப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகமான ‘சிசிடிவி’ தெரிவித்துள்ளது.அண்டை மாநிலமான குவாங்டாங்கில் உள்ள 574,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றியதாக அதிகாரிகள் செப்டம்பர் 6ஆம் தேதி தெரிவித்தனர்.வியட்னாமின் வடக்குப் பகுதியை நோக்கி நகர்ந்துள்ள ‘யாகி’ புயல், அங்கு ஒரு மணி நேரத்துக்கு 187 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனச் சீன வானிலை ஆய்வக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை