உரிமமற்ற சேவைகள்: 13 வெளிநாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு

  தமிழ் முரசு
உரிமமற்ற சேவைகள்: 13 வெளிநாட்டவர்கள் மீது குற்றச்சாட்டு

மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் உரிமமற்ற சேவையில் ஈடுபட்ட சந்தேகத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களில் 13 பேர் மீது சனிக்கிழமை (செப்டம்பர் 7) குற்றம் சாட்டப்பட்டது. அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள்.கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 24 பேர் விசாரிக்கப்பட்டதாகக் காவல்துறை கூறியது.அவர்கள் 27 வயதுக்கும் 58 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அது தெரிவித்தது. மத்திய காவல்துறைப் பிரிவு தலைமையில் குற்றப் புலனாய்வுத் துறை, வர்த்தக விவகாரத் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மரினா பே சேண்ட்ஸ் பணியாளர்களும் அந்த விசாரணையில் கலந்துகொண்டனர். பிடிபட்டவர்களில் 17 ஆடவர்களும் 7 பெண்களும் சட்டவிரோதச் சேவைகளில் ஈடுபட்டதற்காக விசாரிக்கப்பட்டனர். வெளிநாட்டு நாணயப் பரிமாற்றம், பணம் அனுப்பும் சேவைகள் ஆகியன அந்த சட்டவிரோதச் செயல்கள். காவல்துறையின் நடவடிக்கையில் சிக்கியோரிடம் இருந்து $190,000 மதிப்புள்ள சூதாட்டக் காய்கள், ரொக்கம், பல்வேறு மின்னணுச் சாதனங்கள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.சிங்கப்பூர் நாணய நோட்டுகளுக்கு நிகரான சீன நாணய நோட்டுகளையும் அதேபோல சீன நாணய நோட்டுகளுக்கு இணையான சிங்கப்பூர் நாணய நோட்டுகளையும் அவர்கள் சட்டவிரோதமாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு ஆவணங்கள் தெரிவித்தன.இவ்வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. உரிமம் இன்றி பணம் அனுப்பும் சேவையில் ஈடுபட்ட குற்றத்திற்கு மூன்றாண்டு வரையிலான சிறைத் தண்டனை, $125,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.

மூலக்கதை