அமெரிக்க பொதுவிருது டென்னிஸ்: இறுதியாட்டத்திற்கு முன்னேறிய சின்னர்

  தமிழ் முரசு
அமெரிக்க பொதுவிருது டென்னிஸ்: இறுதியாட்டத்திற்கு முன்னேறிய சின்னர்

நியூயார்க்: அமெரிக்க பொதுவிருது போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.ஆண்களுக்கான இரண்டாம் அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை காலை நடந்தது. அதில் பிரிட்டனின் ஜாக் டிராப்பர், தரவரிசையில் முதல் நிலையில் உள்ள இத்தாலியின் யானிக் சின்னருடன் மோதினார். சின்னர் எளிதாக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆட்டம் ஆரவாரமாகத் தொடங்கியது. குறைந்த அனுபவம் இருந்தாலும் 22 வயது டிராப்பர், சின்னருக்கு தொடக்கம் முதலே கடுமையான சவால் கொடுத்தார்.இருப்பினும் இரண்டாவது செட்டில் சின்னரின் வேகத்துக்கு டிராப்பரால் ஈடுகொடுக்க முடியவில்லை. மேலும் இரண்டாவது செட்டின் போது டிராப்பர் மூன்று முறை களத்திலேயே வாந்தி எடுத்தார். மூன்றாவது செட்டில் சோர்வாக காணப்பட்ட டிராப்பர் சின்னரிடம் சரணடைந்தார். இறுதியில் சின்னர் 7-5, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை வென்று இறுதியாட்டத்திற்கு முன்னேறினார். அமெரிக்க பொதுவிருதில் முதல்முறையாக இறுதியாட்டத்தில் களமிறங்குகிறார் 23 வயது சின்னர். அவர் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை சந்திக்கிறார். டெய்லர் பிரிட்ஸ் அரையிறுதி ஆட்டத்தில் சகநாட்டு வீரரான பிரான்சிஸ் டியோபோவை வீழ்த்தினார். கடுமையாக நடந்த இந்த ஆட்டத்தில் டெய்லர் பிரிட்ஸ் 4-6, 7-5, 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் டியோபோவை வென்றார்.இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நியூயார்க்கில் நடக்கிறது. சின்னர் இவ்வாண்டு நடந்த ஆஸ்திரேலிய பொதுவிருதின் வெற்றியாளர். பிரெஞ்சு பொதுவிருதின் அரையிறுதி ஆட்டத்திலும் விம்பிள்டன் பொதுவிருதின் காலிறுதி ஆட்டத்திலும் தோல்வியடைந்தார். அதனால் அமெரிக்க பொதுவிருதை வெல்ல சின்னர் கடுமையாகப் போராடலாம்.“டிராப்பருக்கு எதிரான ஆட்டம் உடல்ரீதியான ஆட்டம். அதேபோல் நான் மனதளவில் தயாராக இருந்தேன். அதனால் ஆட்டத்தில் முழுகவனம் செலுத்த முடிந்தது. இறுதியாட்டத்திலும் நன்றாக செயல்பட விரும்புகிறேன்,” என்று சின்னர் தெரிவித்தார்.

மூலக்கதை