திருச்சி அருகே காவிரி ஆற்றில் குளித்த தந்தை - மகள் பலி
திருச்சி,திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் ( 40 ) இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மேலும் பத்தாளப்பேட்டையில் பெல் ஊழியர்களால் நடத்தப்படும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரின் உறுப்பினராக இருந்தார். இந்தநிலையில், நேற்று மதியம் இவரது மகள்களான கிருத்திகா (13) மற்றும் யாஷிகா (6) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு பத்தாளப்பேட்டை பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு சுரேஷ் முயன்றுள்ளார். அப்போது கிருத்திகா தண்ணீரில் இறங்காமல் கரையில் அமர்ந்திருந்த நிலையில், யாஷிகா தண்ணீரில் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட யாஷிகாவை காப்பாற்றுவதற்காக சுரேஷ் தண்ணீரில் குதித்துள்ளார். இதில் சுரேஷும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த கிருத்திகா கூச்சலிட்டுள்ளார். கூச்சல் சப்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் யாஷிகாவை மீட்டு பெல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் யாஷிகா ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.இதையடுத்து சுரேஷ் உடலை அப்பகுதி மக்கள் தேடி வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார், யாஷிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை செய்து வருவதோடு சுரேஷின் உடலை மீட்பதற்கு உரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது