விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கள்ளக்குறிச்சி,கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 68 பேர் உயிரிழந்த நிலையில், 161 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுதொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் விற்பனை செய்தது, மெத்தனால் விற்பனை செய்தது தொடர்பாக 24 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் விஷ சாராயம் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஏற்கனவே 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். இதையடுத்து மாதவச்சேரியை சேர்ந்த ராமர், கருணாபுரத்தை சேர்ந்த பரமசிவன், முருகேசன் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு வினோத் சாந்தாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.இதையடுத்து ராமர் உள்பட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவர்களுக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.