மீனவர்களுக்கு மொட்டை: இலங்கை அரசை கண்டித்து 20-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

  தினத்தந்தி
மீனவர்களுக்கு மொட்டை: இலங்கை அரசை கண்டித்து 20ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்  கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டு மீனவர்களை கடல் எல்லையில் கைது செய்து துன்புறுத்துவதை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். படகுகளை சுற்றி வளைத்து அச்சுறுத்துவது, நாட்டுப் படகுகளையும் கூட கைப்பற்றி வழக்குப் போடுவது, மீனவர்களை கைது செய்து துன்புறுத்துவது, நடுக்கடலில் மோதலுக்கு முயல்வது என பல வகையான முயற்சிகளை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது செய்து வருகின்றனர்.இப்படிப்பட்ட சூழலில்தான் அண்மையில் கைது செய்த தமிழ்நாட்டு மீனவர்கள் சேது, அடைக்கலம், கணேசன் ஆகியோரின் மீது வழக்குப் போட்டுள்ள இலங்கை அரசாங்கம் அவர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்ததுடன், அதனை செலுத்தவில்லை என்று கூறி மொட்டையடித்து, கைதிகள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து அவமதித்துள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் இலங்கை கடற்படையினரின் இந்த இழிவான அராஜகப் போக்கினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை அரசையும், தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினையில் பாராமுகமாக உள்ள மோடி அரசாங்கத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் வருகிற 20-ம் தேதி அன்று ராமேசுவரத்தில், சி.பி.ஐ(எம்) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையேற்கிறார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இதில் மீனவர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு கண்டனக் குரல் எழுப்ப வேண்டுமென சி.பி.ஐ(எம்) சார்பில் அறைகூவி அழைக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை