பல ஆண்களை கல்யாணம் செய்து பண மோசடி: கல்யாண ராணியின் தோழி கைது
கரூர்,திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 29 வயதான இவர் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். ராஜாவுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெண் தேடி வந்தனர். அப்போது ஆன்லைன் மேட்ரிமோனியல் ஆப் மூலமாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த சத்யா (30) என்பவர் ராஜாவுக்கு அறிமுகம் ஆகி உள்ளார்.ராஜா உடன் சத்யா வாட்ஸ்அப் மூலம் பேசி உள்ளார். அப்போது ராஜாவிடம் தனது திருமணத்திற்கு வரன் தேடுவதாகவும், தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சத்யா கூறியிருக்கிறார். கையோடு தமிழ்ச்செல்வியையும் ராஜாவுக்கு சத்யா அறிமுகம் செய்து வைத்துள்ளார். சத்யாவும் ராஜாவும் செல்போனில் பேசி வந்த நிலையில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து போயிருக்கிறது.இதையடுத்து, சத்யாவும் ராஜாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தின் போது சத்யாவுக்கு மாப்பிள்ளை வீட்டார் 12 பவுன் நகைகளை அணிவித்து இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சத்யாவின் நடவடிக்கையில், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, செல்போனை எடுத்து பார்த்த போது, சத்யா பல ஆண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இருந்து இருக்கின்றன. இது பற்றி சத்யாவின் கணவர் ராஜா, கேட்ட போதும் வீட்டில் இருந்து சத்யா திடீரென எஸ்கேப் ஆனார்.இதையடுத்து தாராபுரம் அனைத்து காவல் நிலையத்தில் ராஜா புகார் செய்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. சத்யா சுமார் 50க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி கல்யாணம் செய்து பணம் பறித்தது தெரியவந்தது. சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவர் முதல் எஸ்.ஐ வரை சிக்கி தங்களது பணத்தையும் நகைகளையும் பறி கொடுத்ததுதான் மிச்சம்.இதையடுத்து, சத்யாவை தேடி வந்த போலீசார், புதுவையில் வைத்து கைது செய்தனர். இந்த நிலையில் திருப்பூர் சிறையில் உள்ள சத்யா, தனக்கு ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவில் 60 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் நிலையில் இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சத்யாவிற்கு சென்னை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.இந்த நிலையில்தான், சத்யாவுக்கு புரோக்கராகவும் தோழியாகவும் இருந்த தமிழ்ச்செல்வி என்பவரை கரூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். செல்போன் சிக்னல் மூலம் தமிழ்ச்செல்வியை கைது செய்துள்ளனர். அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் அருகே உள்ள நல்லூர் சிறையில் அடைத்தனர். தமிழ்ச்செல்வியிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.