சட்டவிரோத மின்கழிவு வளாகங்களில் சோதனை; $12.5 மில்லியன் மதிப்புடைய பொருள்கள் பறிமுதல்

  தமிழ் முரசு
சட்டவிரோத மின்கழிவு வளாகங்களில் சோதனை; $12.5 மில்லியன் மதிப்புடைய பொருள்கள் பறிமுதல்

சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆறு மின்கழிவு வசதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரிங்கிட் 41.58 மில்லியன் (S$12.54 மில்லியன்) மதிப்பிலான மூலப்பொருள்களும் உபகரணங்களும் சிக்கியுள்ளன.கிள்ளானின் பண்டமரான் பகுதியில் உள்ள ஆறு இடங்களிலும் ஜனவரி 1 முதல் செப்டம்பர் 14 வரை பல்வேறு சட்ட அமலாக்க அமைப்புகளின் கூட்டுச் சோதனைகள் நடத்தப்பட்டன. அதிரடிச் சோதனையில் 22 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு மலேசியர்களும் 43 வெளிநாட்டவரும் தடுத்து வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.“உலோகங்களாக மாற்றப்படக்கூடிய பல்வேறு மின்னியல் பொருள்களை நாங்கள் கைப்பற்றினோம். 2,800 கிலோ துருப்பிடிக்காத எஃகு, 83,700 கிலோ அலுமினியம், 6,000 கிலோ இரும்பு, 37,000 செம்பு, 30,000 கிலோ நெகிழி, 103,000 கிலோ கம்பிவடங்கள், 50 மின்கழிவுச் செயலாக்க இயந்திரங்கள், 14 போக்குவரத்து இயந்திரங்கள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரிங்கிட் 41.58 மில்லியன்,” என்று அறிக்கையில் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.தடுத்துவைக்கப்பட்ட உள்ளூர்வாசிகள், சட்டவிரோதச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தவர்கள் என்றும் லாபத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் என்றும் கூறப்பட்டது.உரிமமின்றி இயங்கி வந்த மின்கழிவு வசதிகள் யாவும் பதிவு செய்யப்படாதவை. மில்லியன் கணக்கான ரிங்கிட் லாபத்தை அவை ஈட்டியதாகவும் மின்கழிவைக் கையாள வெளிநாட்டவர் வேலைக்கு வைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

மூலக்கதை