மோசடி வழக்குகளில் வங்கிக் கணக்கை முழுவதுமாக முடக்க முடியாது: உயர் நீதிமன்றம்

  தமிழ் முரசு
மோசடி வழக்குகளில் வங்கிக் கணக்கை முழுவதுமாக முடக்க முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை: நிதி மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கை முழுவதுமாக முடக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை என்றும் மோசடி செய்ததாகக் கூறப்படும் பணத்தை மட்டுமே முடக்க முடியும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் எச்டிஎஃப்சி வங்கிக் கிளையிலுள்ள தனது வங்கிக் கணக்கு கடந்த ஓராண்டாக முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி, முகம்மது சைஃபுல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தெலுங்கானா மாநில இணையக் குற்றப் பிரிவுக் காவல்துறை உத்தரவின்பேரில் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதனால், அன்றாடச் செலவுகளுக்குக்கூட பணம் எடுக்க முடியாமல் தான் தவிப்பதாகவும் சைஃபுல்லா தமது மனுவில் கூறியிருந்தார். இவ்வழக்கு விசாரணைக்குப் பின் தீர்ப்பளித்த நீதிபதி, “நிதி மோசடி வழக்குகளில் முறையான நடவடிக்கை இன்றியும் காரணத்தை விளக்காமலும் காவல்துறை முழு வங்கிக் கணக்கையும் முடக்க முடியாது. மனுதாரர் மோசடி செய்ததாகக் கூறப்படும் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு, எஞ்சிய தொகையை அவர் பயன்படுத்திக்கொள்ளும் அவரது வங்கிக் கணக்கைச் சம்பந்தப்பட்ட வங்கிகள் மாற்றியமைக்க வேண்டும்,” என உத்தரவிட்டார். மேலும், “விசாரணை நிலுவையில் உள்ள கணக்குகளை முடக்கவும், அவற்றைச் சட்டபூர்வமாக நீதிமன்றங்களுக்கு உடனடியாகத் தெரிவிக்கவும் சம்பந்தப்பட்ட வங்கியைக் கோருவதற்கு விசாரணை நிறுவனங்களுக்கு சட்டங்கள் அதிகாரம் அளிக்கின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால், அதிகாரம் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதே இப்போது பெரிய கேள்வியாக உள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்குக் காரணங்களைத் தெரிவிக்காததோடு, அதிகார வரம்பிற்குட்பட்ட நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமலேயே வங்கிக் கணக்குகளை முடக்குவது, வங்கிகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதையே காட்டுகிறது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

மூலக்கதை