சாம்சுங் ஊழியர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் 100 பேர் கைது

  தமிழ் முரசு
சாம்சுங் ஊழியர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் 100 பேர் கைது

சென்னை: சென்னைக்கு அருகே அமைந்துள்ள சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத் தொழிற்சாலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் ஏறக்குறைய 100 பேரையும் தொழிற்சங்கத் தலைவர்களையும் காவல்துறை தடுத்துவைத்துள்ளது.திங்கட்கிழமை (செப்டம்பர் 16) அவர்கள் அனுமதியின்றி ஊர்வலம் செல்லத் திட்டமிட்டிருந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரிக்கும் சாம்சுங் தொழிற்சாலையின் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஏழு நாள்களாக வேலைக்குச் செல்லவில்லை.இதனால் உற்பத்தி தடைபட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தியாவில் சாம்சுங் நிறுவனத்தின் ஆண்டு வருவாய் $12 பில்லியன். அதில் மூன்றில்-ஒரு பங்கிற்கு இந்தத் தொழிற்சாலை உற்பத்தி பங்களிக்கிறது.இதன் ஊழியர்கள் ஏறக்குறைய 100 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டதாகக் கூறிய காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை அதிகாரி சங்கர் கணேஷ், அதுகுறித்து மேல்விவரங்களை வெளியிடவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியது.பெயர் கூற விரும்பாத மற்றோர் அதிகாரி, அவர்கள் அனுமதியின்றிப் பேரணி நடத்தத் திட்டமிட்டதால் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறினார்.சாம்சுங் நிறுவனம் இதுகுறித்துக் கருத்துரைக்கவில்லை.தொழிற்சாலைக்கு அருகே தற்காலிகப் பந்தல் அமைத்து ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஊதிய உயர்வோடு மேம்பட்ட வேலை நேரத்தையும் இந்தியத் தொழிற்சங்கங்கள் நிலையத்தின் (CITU) ஆதரவு பெற்ற தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும்படியும் அவர்கள் கோருகின்றனர். சாம்சுங் நிறுவனம் இவ்வாறு வெளி ஆதரவு பெற்ற தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க விரும்பவில்லை.இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய மூத்த தொழிற்சங்கத் தலைவர் இ.முத்துக்குமாரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தொழிற்சங்கங்கள் நிலையம் தெரிவித்தது.

மூலக்கதை