டிரம்ப் கொலை முயற்சி: கந்தேக நபர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்படலாம்
மேற்கு பாம் பீச் (அமெரிக்கா): அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலம், திரு டோனல்ட் டிரம்ப் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி தொடர்பில் தானே விசாரணை நடத்தப்போவதாக அம்மாநில ஆளுநர் ரோன் டிசான்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும், சந்தே நபர் மீது மேலும் கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் முயற்சியைத் தாங்கள் மேற்கொள்ளப்போவதாகவும் அம்மாநிலம் தெரிவித்தது. அமெரிக்க மத்திய அரசாங்கத்தின் துப்பாக்கிப் பயன்பாட்டு விதிமுறைகளை மீறியதன் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் போதிய கடுமையானவை அல்ல என்று திரு டிசான்டிஸ் கூறினார். திரு டிரம்ப் மீதான கொலை முயற்சி தொடர்பிலான விசாரணையை ஃபுளோரிடாவின் தலைமைச் சட்ட அதிகாரி ஆஷ்லி மூடியிடம் தாம் ஒப்படைப்பதாக திரு டிசான்டிஸ் சொன்னார். திரு டிரம்ப் சம்பந்தப்பட்டுள்ள விவகாரங்களில் மத்திய அரசாங்கம் பாரபட்சமின்றி நடந்துகொள்ளும் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லாதது அதற்கு ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.“திரு டிரம்ப் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் அதே அமைப்புகளிடம் இந்த விசாரணையை ஒப்படைப்பதில் எங்கள் மாநிலத்துக்கோ இந்த தேசத்துக்கோ உடன்பாடு இருக்காது என்பது எனது கணிப்பு,” என்று திரு டிசான்டிஸ் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் விவரித்தார்.திரு டிரம்ப், சனிக்கிழமையன்று (செப்டம்பர் 15) மேற்கு பாம் பீச்சில் தமக்குச் சொந்தமான பகுதியில் கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்தபோது சந்தேக நபரான ரயன் ரூத் அங்கிருந்து தப்பியோடியபோது உளவுத் துறை அதிகாரிகளால் பிடிபட்டார். மரங்கள் வரிசையாக இருந்த பகுதியில் துப்பாக்கி முனை காணப்பட்டதைத் தொடர்ந்து உளவுத் துறை அதிகாரிகள் சந்தேக நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். 58 வயது ரூத் மீது, ஏற்கெனவே குற்றவாளிஎனத் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் பதிவு எண் அழிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாகவும் முதலில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஃபுளோரிடா அதையும் தாண்டிய நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக திரு டிசான்டிஸ் தெரிவித்தார். அந்த வகையில் ரூத் மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு சுமத்தப்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.